முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

திமுக, அதிமுக கூட்டணிகளில் யார் ஹேப்பி? யார் அப்செட்?

திமுக, அதிமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு பற்றி...

Updated On : 26 மார்ச், 2026 at 8:56 AM
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (சித்திரிப்புப் படம்) - ChatGPT
பகிர்:

50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டை மாறிமாறி ஆட்சி செய்து வரும் திமுகவும் அதிமுகவும் மன நிறைவுடனோ, மனக் கசப்புடனோ, ஒரு வழியாக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளன. இதில், போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் திங்கள்கிழமை (மார்ச் 30) முதல் தொடங்கவுள்ளன.

அதற்கு முன்னதாக, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தங்களின் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்து பிரசாரத்தை தொடங்கியுள்ளன. அதிமுக ஒரு அடி முன்பாக, கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்ததுடன், முதல்கட்ட வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது.

தமிழக வெற்றிக் கழகமும், நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிடுவதால் அவர்களுக்கு இந்த பிரச்னையெல்லாம் இல்லை.

இதனிடையே, ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியும், சசிகலாவின் அபுதமமுகவும் (அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்) கூட்டணி அமைத்துள்ளன. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையெல்லாம் எப்போது நடைபெறும் எனத் தெரியவில்லை.

யார் ஹேப்பி? யார் அப்செட்?

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் 2019 மக்களவைத் தேர்தல் முதல் தற்போது வரை இதே கூட்டணியில் தொடர்ந்து வருகின்றன.

இந்த கூட்டணி 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் என மூன்று தேர்தல்களில் தொடர்ந்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இதே கூட்டணி தொடருமா? அல்லது கட்சிகள் வெளியேறுமா? என்ற சந்தேகத்தை தூண்டும் வகையில் தொகுதிப் பங்கீட்டில் நீண்ட இழுபறி நீடித்தது.

திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸும், புதிய வரவான தேமுதிகவும்தான் “குமுதா ஹேப்பி அண்ணாச்சி” என்ற படத்தின் வசனத்தைப் போன்று மிகவும் மகிழ்ச்சியாக வலம் வருகிறார்கள்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், தற்போது கூடுதலாக 3 தொகுதிகளிலும், ஒரு மாநிலங்களவை இடத்தையும் பெற்றுள்ளது. இன்னொரு மாநிலங்களவை இடம் பின்னர் கொடுக்கப்படும் என்றும் தகவல்.

காங்கிரஸின் ஜாக்பாட்டுக்கு முக்கிய காரணம் தமிழக வெற்றிக் கழகம்தான். திமுகவிடம் நேரடியாக கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவது மிகக் கடினம் என்ற நிலையில், மாணிக்கம் தாகூர், பிரவீண் சக்ரவர்த்தி போன்றோர் களத்தில் இறங்கி ஆடினர்.

தொடர்ந்து ஒரு மாதமாக கூடுதல் தொகுதிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற இரண்டு விஷயத்தை மட்டுமே பேசிய இவர்கள், விஜய்யின் தவெகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தெரிவித்தனர்.

விஜய்யும் அவர் கட்சியின் நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனாவும் எப்படியாவது காங்கிரஸை தங்கள் பக்கம் இழுத்துவிட வேண்டுமென்று தொடர் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இறுதியில் கூடுதலாக 3 தொகுதிகளை (மொத்தம் 28) பெற்றுவிட்டு, ஒரு மாநிலங்களவை இடத்தையும் பெற்று, திமுகவுடனான ஒப்பந்தத்தில் காங்கிரஸ் கையெழுத்திட்டது.

இதில் ஏமாற்றமடைந்தது விஜய்தான்.

காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள், தேமுதிகவுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும், தமக்கான தொகுதியும் குறையக் கூடாது போன்ற இக்கட்டான சூழலில் சிக்கிய திமுக, ஏற்கெனவே கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் தொகுதிகளைக் குறைத்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்டதைவிட ஒரு தொகுதி குறைவாக 5 தொகுதிகளை ஒதுக்கியது திமுக. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் தொகுதிக்காக பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில் 6 தொகுதிகளாவது வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்றது.

ஆனால், தங்களின் பிடிவாதம் தே.ஜ. கூட்டணிக்கு சாதகமாக அமைந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக மனக்கசப்புடன் 5 தொகுதிகளைப் பெற்று கூட்டணியில் தொடர மார்க்சிஸ்ட் முடிவெடுத்தது.

கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுகவுக்கு இந்த முறை 4 தொகுதிகள்தான். அதில் ஒரு தொகுதியில் மட்டுமே தனிச் சின்னம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரட்டை இலக்க எண்ணில் தொகுதிகளைப் பெற முயற்சித்தது. ஆனால், பெரும் போராட்டத்துக்குப் பிறகு கடந்த முறையைவிட இரண்டு இடங்கள் மட்டுமே கூடுதலாக 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

கொமதேக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளுக்கு கடந்த முறை 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தலா ஒரு தொகுதி குறைக்கப்பட்டு 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டது.

இதனிடையே மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் அறிக்கை அனைவருக்கும் அதிர்ச்சியை (திமுகவுக்கு இன்ப அதிர்ச்சி) ஏற்படுத்தியது.

“இன்றிருக்கும் இக்கட்டான அரசியல் சூழலில், நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்புடையதாக இல்லை.

பேட்டரி டார்ச் என்பது எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிக்கிறோம்” என்று கமல் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஒரே சிட்டிங்கில் திமுகவிடம் 10 தொகுதிகளைப் பெற்றதுதான் அனைவரையும் புகைச்சலடைய வைத்துள்ளது. ஏற்கெனவே கூட்டணியில் இணைந்ததற்கு பரிசாக ஒரு மாநிலங்களவை இடமும் கொடுக்கப்பட்டுள்ளது.

விசிக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஒரே கேள்வியாகக் கூறப்படுவது, 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அரை சதவிகித (0.43) வாக்குகள்கூட பெறாத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? என்பதுதான். சமூக ஊடகங்களிலும் திமுகவின் வியூகம் கேள்விக்குறியாகியுள்ளது.

அப்படியே அதிமுக பக்கம் வந்தால் நிலைமையே வேறு. தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்தே கூட்டணிக்குள் பாஜகவின் கை ஓங்கி இருக்கின்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கூட்டணியின் தலைவரான எடப்பாடி பழனிசாமியும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தில்லி சென்று முகாமிட்டது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

"தேர்தல் களத்தை எதிர்கொள்வதற்கான முடிவுகளைக்கூட தில்லியே எடுக்கும் நிலை. இனி, தில்லியின் முடிவே அவர்களது முடிவு!" என்று முதல்வர் ஸ்டாலினும் விமர்சித்திருந்தார்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், தில்லியில் இருந்து சென்னை திரும்பிய அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் அதிமுக அலுவலகம் வரவழைக்கப்பட்டனர். தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம், தொகுதிகள் அறிவிப்பு போன்றவை அதிமுக அலுவலகத்திலேயே நடைபெற்றது.

இருப்பினும், ”அனைத்தையும் பேசி முடித்தது அமித்ஷா. தொகுதிப் பங்கீட்டு எண்ணிக்கையை மட்டும் சொல்லும் வெறும் 'அறிவிப்பாளர்' பதவியை மட்டும் பெற்றதில் பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது?” என்று அமைச்சர் ஐ. பெரியசாமி அறிக்கை வெளியிட்டு விமர்சித்திருந்தார்.

மேலும், தே.ஜ. கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் 5 தொகுதிகள், ஐஜேகே உள்ளிட்ட சிறு கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் தாமரை சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர். இதன்மூலம் மொத்தம் 40 தொகுதிகள் வரை தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.

கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் தற்போது தாமரை சின்னத்தில் போட்டியிடுவது அதிமுகவுக்கு பலவீனமாக அமைந்துள்ளது.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் 169 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே, திமுகவின் கூட்டணியில் உள்ள மமக, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதன்மூலம், கிட்டத்தட்ட 175 தொகுதிகள் வரை உதய சூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.

பாஜகவின் ’பீ’ டீமா காங்கிரஸ்?

கேரள முதல்வர் பினராயி விஜயன், ’பாஜகவின் பீ டீம் காங்கிரஸ்’ என்று தொடர்ந்து தனது பிரசாரங்களில் கூறிவருகிறார். அவரின் கருத்துக்கு ஏற்றது போல், புதுச்சேரியில் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் வேட்பாளரை நிறுத்தி, கூட்டணியைத் தோல்விப் பாதைக்கு வழிவகுத்துள்ளது காங்கிரஸ்.

திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தாமதமானதால் முன்னெச்சரிக்கையாக 30 தொகுதிகளிலும் இரு கட்சிகள் சார்பிலும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

பின்னர், காங்கிரஸுக்கு 16, திமுகவுக்கு 13, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி என ஒப்பந்தம் கையொப்பமானது.

இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களில் சிலர் வேட்புமனுவைத் திரும்பப் பெற மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

இதனை விமர்சித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், புதுச்சேரியில் காங்கிரஸின் அணுகுமுறை கூட்டணியின் வெற்றியைக் கேள்விக்குறியாக்குவதாக தெரிவித்துள்ளார்.

பிகாரிலும் இதே நிலைமைதான் ஏற்பட்டது. ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள் திரும்பப் பெறாமல் ’நட்புப் போட்டி’யில் ஈடுபட்டு கூட்டணியைப் படுதோல்வி அடையச் செய்தனர்.

இதே நிலைமை புதுவையில் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

மற்றொரு பக்கம், என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுவை தேர்தலை சந்திக்கும் அதிமுகவுக்கு வெறும் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுவையை இரண்டு முறை ஆட்சி செய்த அதிமுக இரண்டு தொகுதிகளை ஏற்றுக் கொண்டது எப்படி? என்ற கேள்விக்கு பதிலில்லை.

தமிழ்நாட்டில் இரண்டு கூட்டணிகளிலும் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? கேட்ட இடங்கள், பெற்ற இடங்கள், கிடைத்த இடங்கள் எல்லாம் ஓகேதானா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

summary

DMK and AIADMK alliances! Who is happy? Who is upset?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.