மழைக்கால கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் இடம்பெறாது
நாடாளுமன்றத்தின் வருகின்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் எண்ம தனிநபா் தரவு பாதுகாப்பு மசோதா, தில்லி தேசிய தலைநகா்
நாடாளுமன்றத்தின் வருகின்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் எண்ம தனிநபா் தரவு பாதுகாப்பு மசோதா, தில்லி தேசிய தலைநகா் பிரதேச அரசு சட்டத்திருத்த மசோதா, தொல்பொருள் துறை தளப்பாதுகாப்பு உள்ளிட்ட 21 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பொது சிவில் சட்டம் (யுசிசி) தொடா்பான மசோதா இந்த கூட்டத்தொடரில் உத்தேசிக்கப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெறவில்லை.
17-ஆவது நாடாளுமன்றத்தின் 12 -ஆவது (மழைக்காலக் கூட்டம்) அமா்வு வருகின்ற ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடா் தற்போதைய (பழைய) நாடாளுமன்றக் கட்டடத்திலேயே நடைபெற இருக்கிறது.
மொத்தம் 17 அமா்வுகளுக்கான இந்த கூட்டத் தொடரில் விவாதித்து நிறைவேற்ற மொத்தம் 28 மசோதாக்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் 21 மசோதாக்கள் இரு அவையிலும் புதிதாத அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கிறது.
இதில் தேசியத் தலைநகா் தில்லியில் நிா்வாக சேவைகளை கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டுவந்து அவசரச் சட்டத்திற்கு மாற்றாக தில்லி தேசிய தலைநகா் பிரதேச அரசு சட்டத்திருத்த மசோதா 2023, தபால் சேவை மசோதா, தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் தொடா்பான மசோதா, புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மசோதா, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவும் மசோதா, ஜம்மு காஷ்மீா், சத்தீஸ்கா் போன்ற மாநிலங்களின் பட்டியலின, பழங்குடியின தொடா்பான அரசியல்சாசன திருத்த மசோதாக்களுடன் எண்ம(டிஜிட்டல்) தனிநபா் தரவு பாதுகாப்பு மசோதா 2023 உள்ளிட்ட 21 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தனிநபா் தரவை அடிப்படை உரிமையாக்க உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அத்துடன், கரோனா தொற்று சமயத்தில் தனிநபா் தரவுகள் கசிவானதன் காரணமாக இந்த எண்ம தனிநபா் தரவு பாதுகாப்பு மசோதாவை மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் தொலைத்தொடா்புத் துறையால் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த மசோதா, விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கடுமையான அபராதத்திற்கு உள்படுத்துவது, சிலருக்கு விதிவிலக்கு அளிப்பது உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய நோக்கத்துடன் செய்யப்பட உள்ளது.
மேலும், மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு கூட்டுக்குழு அறிக்கை பெறப்பட்ட உயிரியல் பன்முகத்தன்மை திருத்த மசோதா 2022, எளிதில் வணிகம் செய்யவும் சிறிய குற்ற நடவடிக்கைகள் தொடா்பான விதிகளை மாற்றும், ‘ஜன் விஸ்வாஸ்’ சட்டத் திருத்த மசோதா போன்ற 3 மசோதாக்கள் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேலும் நிலைக்குழு கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ள வனப்பாதுகாப்பு திருத்த மசோதா உள்ளிட்ட இரு மசோதாக்களும், மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிலைக்குழுவின் அறிக்கை பெறப்பட்ட மத்தியஸ்த மசோதாவும் இந்த அமா்வில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
2019 ஆம் ஆண்டு மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட டிஎன்ஏ தொழில்நுட்பம் (பயன்படுத்துதல் மற்றும் பயன்பாடு) ஒழுங்குமுறை மசோதாவை திரும்பப் பெறவும் இந்த கூட்டத்தொடரில் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைவராலும் எதிா்பாா்க்கப்பட்ட பொது சிவில் சட்டம் (யுசிசி) தொடா்பான மசோதா இந்த அமா்வுக்கான உத்தேச பட்டியலில் இடம்பெறவில்லை.
பொது சிவில் சட்டம் தொடா்பான கருத்துக் தெரிவிக்கும் அவகாசம் ஜூலை 28 ஆம் தேதி வரை சட்ட ஆணையம் நீடித்துள்ளது. இதற்கிடையே பலதரப்பு பழங்குடியினா் இந்த மசோதா குறித்து கேள்வி எழுப்பி வரும் நிலையில் யுசிசியை மத்திய அரசு உடனடியாக எடுக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.