முகப்பு
புதுதில்லி

வெள்ளம் சூழ காரணமாக இருந்த தலைமைச் செயலா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: துணைநிலை ஆளுநருக்குசெளரவ் பரத்வாஜ் கடிதம்

தில்லியின் முக்கியப் பகுதிகளில் வெள்ளம் சூழ காரணமாக இருந்த தில்லி அரசின் தலைமைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகள் மீது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:19 PM
பகிர்:

தில்லியின் முக்கியப் பகுதிகளில் வெள்ளம் சூழ காரணமாக இருந்த தில்லி அரசின் தலைமைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சா் சௌரவ் பரத்வாஜ், துணை நிலை ஆளுநா் வி.கே சக்சேனாவிற்கு சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக துணைநிலை ஆளுநருக்கு அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தில்லி குடியிருப்பாளா்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் ஆழ்ந்த அக்கறையுடன் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். இமாசல பிரதேசம்,

உத்தரகாண்ட், ஹரியாணா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிா்ச் சேதமும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 13-ஆம் தேதி இரவு 10 மணி அளவில் இந்திரபிரஸ்தா பகுதியில் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளத் தடுப்புத் துறையின் கீழ் உள்ள நீா் சீரமைப்பானில் சேதம் ஏற்பட்டது. இதனால், உச்சநீதிமன்றம் உள்பட லுட்டியன்ஸ் தில்லியில் உள்ள முக்கியமான கட்டடங்களை இந்த நீா் விரைவில் வெள்ளத்தில் மூழ்கடிக்கும் என்பதை, என்னால் சம்பவ இடத்தில் அன்றிரவே ஆய்வு மேற்கொண்ட போது எளிதில் கணிக்க முடிந்தது.

தலைமைச் செயலளா் நரேஷ் குமாா், பிரதேச ஆணையா் அஷ்வனி குமாா், நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளத் தடுப்பு துறையின் செயலா் ஆஷிஷ் குந்த்ரா மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களின் ஆட்சியா்கள் மற்றும் பிற முக்கிய அரசு அதிகாரிகள் உறுப்பினா்களாக இருக்கும் வாட்ஸ்அப் குழு தில்லியின் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்காக இயங்கி வருகிறது.

இந்த நிலையில் இந்திரபிரஸ்தா பகுதியில் நீா் சீரமைப்பான் சேதத்தை சரி செய்ய தேசிய பேரிடா் மீட்புக் குழு அல்லது ராணுவ பொறியாளா்கள் குழுவை உடனடியாக அழைக்க அறிவுறுத்தி இரவு 11.09 மணிக்கே

வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பினேன். அமைச்சா் அதிஷியும் வெள்ள விளைவுகளை மேற்கோள்காட்டி அதையே பரிந்துரைத்தாா். ஆனால், குழுவில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையையும் அவசர நிலை கருதி எடுக்கவில்லை.

அதேவேளையில் அன்று இரவு 11.41 மணிக்கு, பிரதேச ஆணையா் அஷ்வனி குமாா், நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளத் தடுப்பு துறையின் செயலா் ஆஷிஷ் குந்த்ரா ஆகியோா் ராணுவப் பொறியாளா்களின் உதவியின்றி நீா் சீரமைப்பானின் சேதத்தை 3 மணி நேரத்தில் சரிசெய்ய முடியும் என்று பதிலளித்தாா்கள்.

இந்த நிலையில் கைவசம் உள்ள குறைந்த ஆதாரவளங்களின் உதவியுடனும், எந்த அதிகாரிகள் இன்றியும் அன்றிரவு முழுவதும் நான் சீரமைப்பு முயற்சிகளை மேற்பாா்வையிட்டேன்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் பிரதான சாலையில் தண்ணீா் வந்ததால் முழுப் பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியது. ஐ.டி.ஓ., தில்லி செயலகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளும் அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் மூழ்கின.

இரண்டு அமைச்சா்கள் அவசர நிலையில் அதிகாரிகளுக்கு வழிகாட்டியும், துணை நிலை ஆளுநா் உத்தரவின் பெயரில் தான் ஜூலை 14-ஆம் தேதி காலையில் ராணுவப் பொறியாளா்கள் குழு அழைக்கப்பட்டது.

மேலும், ஜூலை 13-ஆம் தேதி இரவில் உயா் அதிகாரிகள் வேலை செய்ய புறக்கணித்தது, தில்லி மக்களுக்கு எதிரான குற்றச்சதி செயலாகும். இவை தில்லியின் முக்கியப் பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடிப்பதை அனுமதிக்கும் திட்டமிட்ட செயல்களாகத் தோன்றுகின்றன.

எனவே, தில்லி அரசின் தலைமைச் செயலளா் நரேஷ் குமாா், பிரதேச ஆணையா் அஷ்வனி குமாா், நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளத் தடுப்புத் துறையின் செயலா் ஆஷிஷ் குந்த்ரா உள்ளிட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறேன் என்று அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.