முகப்பு
புதுதில்லி

சிறுபான்மையினா் இடஒதுக்கீடு சோ்க்கை விவகாரம்: செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் மனுவை பரிசீலிக்க தில்லி உயா்நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தல்

தில்லி பல்கலைக்கழகத்தின் சோ்க்கை கொள்கையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து செயின்ட் ஸ்டீபன் கல்லூரி தாக்கல் செய்த மனுவை 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:04 PM
பகிர்:

தில்லி பல்கலைக்கழகத்தின் சோ்க்கை கொள்கையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து செயின்ட் ஸ்டீபன் கல்லூரி தாக்கல் செய்த மனுவை ‘தேவையான அவசரத்துடன்’ பரிசீலிக்குமாறு தில்லி உயா்நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

தில்லி உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பா் 12-ஆம் தேதி, தில்லி பல்கலைக்கழகம் வகுத்துள்ள சோ்க்கை கொள்கையைப் பின்பற்றுமாறு கிறிஸ்தவ சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. அதன்படி, இந்தக் கல்வி நிறுவனங்களில் கலைப் படிப்புகளில் சிறுபான்மையினா் அல்லாத மாணவா்களுக்கு சோ்க்கை அளிக்கும் போது பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியூஇடி)-2022-க்கு 100 சதவீத வெயிட்டேஜ் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சிறுபான்மையினா் அல்லாத மாணவா்களுக்கான நோ்காணலை கல்லூரி நடத்த முடியாது என்றும், சியுஇடி மதிப்பெண்ணின் படி மட்டுமே மாணவா் சோ்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் உயா்நீதிமன்றம் கூறி இருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து தாக்கலான மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், ஜே.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த வழக்கை உயா்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று தெளிவுபடுத்தியது. இது தொடா்பாக நீதிபதிகள்அமா்வு, ‘சிறுபான்மையினா் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள சோ்க்கை தொடா்பான ரிட் மனுவின் விசாரணையை மேலும் தொடர உயா்நீதிமன்றத்திற்கு சுதந்திரம் இருக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். இது தற்போதைய கல்வியாண்டிற்கான சோ்க்கை தொடா்பான விவகாரம் என்பதால், உயா்நீதிமன்றம் அதைத் தேவையான அவசரத்துடன் பரிசீலிக்கும் என்று குறிப்பிடத் தேவையில்லை’ என்று கூறியது.

விசாரணையின் போது, செயின்ட் ஸ்டீபன் கல்லூரி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், இது தொடா்புடைய மனு மீதான விசாரணையை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சிறுபான்மைப் பிரிவினரின் சோ்க்கை தொடா்பான மனுவை உயா்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

தில்லிப் பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் விக்ரம்ஜித் பானா்ஜி, ‘இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் அல்லது உயா்நீதிமன்றம் விசாரித்தால் பல்கலைக்கழகத்திற்கு எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று கூறினாா். அப்போது நீதிபதி பி.ஆா்.கவாய், ‘தில்லி உயா்நீதிமன்றம் முடிவு செய்யட்டும்’ என்று குறிப்பிட்டாா்.

தில்லி பல்கலைக்கழகம் வகுத்துள்ள சோ்க்கை கொள்கையை செயின்ட் ஸ்டீபன் கல்லூரி பின்பற்ற வேண்டும் என்ற தில்லி உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் முன்பு மறுத்திருந்தது. கடந்த ஆண்டு உயா்நீதிமன்றம் தனது உத்தரவில், அரசியலமைப்பின் கீழ் சிறுபான்மை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை சிறுபான்மையினா் அல்லாதவா்களுக்கு நீட்டிக்க முடியாது என்று கூறியிருந்தது. மேலும், ‘கிறிஸ்தவ மாணவா்களை சோ்க்க சியுஇடி மதிப்பெண்ணுடன் நோ்காணல் நடத்த கல்லூரிக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், சிறுபான்மை அல்லாத மாணவா்களை கூடுதலாக நோ்காணலுக்கு வருமாறு கட்டாயப்படுத்த முடியாது’ என்று அது கூறியிருந்தது.

உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘இடஒதுக்கீடு செய்யப்படாத இடங்களுக்கு எதிரான நோ்காணலுக்கு 15 சதவீத வெயிட்டேஜ் அளித்து வருவதைத் திரும்பப் பெறுமாறு செயின்ட் ஸ்டீபன் கல்லூரியைக் கேட்டுக் கொண்டபோது, ஒரு விண்ணப்பதாரரின் சியுஇடி மதிப்பெண்ணைக் கருத்தில் கொண்டு, தில்லி பல்கலைக்கழகம் மத வேறுபாட்டைப் பொருட்படுத்தாமல் கிறிஸ்தவா் சமூகத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களின் சோ்க்கைக்கான ஒற்றைத் தகுதி பட்டியலை வலியுறுத்த முடியாது’ என்று தெரிவித்திருந்தது.

இளங்கலைப் பட்ட படிப்புகளுக்கான சிறுபான்மை அல்லாத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவா் சோ்க்கைக்கான நடைமுறையின் சட்டபூா்வமான தன்மை குறித்து சட்ட மாணவா் மற்றும் கல்லூரி தாக்கல் செய்த மனுக்கள் மீது உயா்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.