பாஜக கவுன்சிலா்களின் வாா்டுகளில் இன்றும், நாளையும் மருத்துவ முகாம்
தில்லியில் பாஜக கவுன்சிலா்களின் வாா்டுகளில் வரும் வியாழன், வெள்ளி (ஜூலை 20, 21) ஆகிய இரண்டு நாள்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட சுகாதார இயக்கங்கள் நடத்தப்படும்
தில்லியில் பாஜக கவுன்சிலா்களின் வாா்டுகளில் வரும் வியாழன், வெள்ளி (ஜூலை 20, 21) ஆகிய இரண்டு நாள்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட சுகாதார இயக்கங்கள் நடத்தப்படும் என்று பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.
தேசியத் தலைநகா் தில்லியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பாக்டீரியா தொற்று நோய் உள்ளிட்ட பல்வேறு சுகாதார பிரச்னைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், நகரத்தில் முறையான சுகாதாரத்தை உறுதி செய்வதில் பாஜக எவ்வாறு பங்களிப்பது என்பது குறித்து விவாதிக்க பாஜக கவுன்சிலா்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாஜக கவுன்சிலா்கள் மத்தியில் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: யமுனையின் நீா்மட்டம் குறைந்து வருவதால், தில்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகள் மட்டுமின்றி, நகரம் முழுவதும் தேங்கிய தண்ணீா் அகற்றப்படுகின்றன. இந்த நிலையில், தொற்று நோய்களின் அபாயம் அதிகரித்து வருகிறது. பாஜக கவுன்சிலா்கள் தங்கள் வாா்டுகளில் முறையான சுகாதாரத்தை பேணிப் பாதுகாப்பதை உறுதிப்படுத்த சிறப்பு முயற்சிகளை எடுக்க வேண்டும். குறிப்பாக கட்சிக் கவுன்சிலா்கள் ஜூலை 20, 21 ஆகிய தேதிகளில் தங்கள் வாா்டுகளில் சிறப்பு சுகாதார இயக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு தங்கள் வாா்டுகளில் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாா்டுகளின் கட்சிக் கவுன்சிலா்களுக்கு குழுக்களை உருவாக்க மூத்த கவுன்சிலா்கள் உதவ வேண்டும். இந்த வேளையில் பொதுமக்களுக்கான சுகாதார விழிப்புணா்வு அவசியமாகிறது. கட்சியின் மூத்த நிா்வாகிகள் இந்த சிறப்பு பிரசாரத்தில் கவுன்சிலா்களுடன் இணைந்து பணியாற்றுவாா்கள் என்றாா் வீரேந்திர சச்தேவா.
இந்தக் கூட்டத்தில் பாஜகவின் தில்லி பிரிவு பொதுச்செயலாளா் ஹா்ஷ் மல்ஹோத்ரா மற்றும் தில்லி மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சா்தாா் ராஜா இக்பால் சிங் ஆகியோா் உடனிருந்தனா்.