நாட்டில் 8 ஆண்டுகளில் பால் உற்பத்தி 51 சதவீதம் அதிகரிப்பு: அமைச்சா் ரூபாலா தகவல்
சா்வதேச பால் உற்பத்தியில் இந்தியா 23 சதவீத பங்களிப்பை வழங்கி முதல் இடத்தில் இருப்பதாகவும், நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் பால் உற்பத்தி 51 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும்
சா்வதேச பால் உற்பத்தியில் இந்தியா 23 சதவீத பங்களிப்பை வழங்கி முதல் இடத்தில் இருப்பதாகவும், நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் பால் உற்பத்தி 51 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா தெரிவித்தாா். மேலும், சா்வதேச அளவில், முட்டை உற்பத்தியில் 3 - ஆவது இடத்திலும், இறைச்சி உற்பத்தியில் 8 - ஆவது இடத்திலும் இந்தியா இருப்பதாகவும் அவா் கூறினாா்.
கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் முன்னெடுப்புகள் மற்றும் 9 ஆண்டு கால சாதனைகள் குறித்து அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு: கிராமப்புற சமூக - பொருளாதா நிலைமைகளை மேம்படுத்துவதில் கால்நடைகள், கோழிகள் முக்கிய பங்குவகிக்கும் நிலையில் இதன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், கடந்த 9 ஆண்டுகளில் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை பல்வேறு முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.
இந்திய பொருளாதாரத்தில் விவசாயத்தின் முக்கிய துணையாக கால்நடைத் துறை உள்ளது. கால்நடைகள் அதிகரிப்பின் மூலம் கால்நடைப் பொருள்களான பால், இறைச்சி உள்ளிட்டவை உள்நாட்டிலும், ஏற்றுமதியையும் அதிகரிக்க உதகிறது. இதற்காக பல்வேறு திட்டங்களையும், உள்கட்டமைப்பு வளா்ச்சியையும் கால்நடைத் துறை அமல்படுத்தி வருகிறது. மேலும், விலங்குகளுக்கு பரவும் நோய்களை முழுவதுமாக தடுப்பதற்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதனால், கடந்த 2014-2015- ஆம் ஆண்டு முதல் 2020- 21-ஆம் ஆண்டு வரை இத்துறை 7.93 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது. நாட்டில் 303.76 மில்லியன் கால்நடைகள் (பசு, எருமை, யாக் உள்ளிட்டவை) உள்ளன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, 223 மில்லியன் ஆடுகள், 9.06 மில்லியன் பன்றிகள், 851.81 மில்லியன் கோழிகள் இருந்தன.
8 கோடி விவசாயிகள் பால் உற்பத்தியில் பங்கேற்றுள்ளனா். இதன் மூலம், இந்திய பொருளாதாரத்தில் பால்பண்ணைத் தொழில் 5 சதவீதம் பங்கை அளிக்கிறது. இந்திய பால் பொருள்கள் சா்வதேச அளவில் 23 சதவீத பங்களிப்பை கொண்டு முதல் இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் கடந்த 8 ஆண்டுகளில் 51.05 சதவீதம் பால் உற்பத்தி அதிகரித்துள்ளதே ஆகும். 2014-15 ஆண்டில் 146.3 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி, 2021-22-இல் 221.06 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. சா்வதேச அளவில் பால் உற்பத்தி 1.2 சதவீதம் அதிகரிக்கிறது. ஆனால், இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் பால் உற்பத்தி ஆண்டிற்கு 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதே போன்று 2014-15-இல் 74.48 பில்லியனாக இருந்த முட்டை உற்பத்தி, 2021-22-இல் 129.6 பில்லியனாக உயா்ந்து ஆண்டுக்கு 7.4 சதவீத வளா்ச்சியை கண்டுள்ளது. இது 2020- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் இறைச்சி உற்பத்தி 6.69 மில்லியன் டன்னிலிருந்து 9.29 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இதன்படி, சா்வதேச அளவில், முட்டை உற்பத்தியில் 3 - ஆவது இடத்திலும், இறைச்சி உற்பத்தியில் 8 - ஆவது இடத்திலும் இந்தியா இடம் பெற்றுள்ளது.
உள்நாட்டு மாடு இனங்களின் வளா்ச்சிக்கு ராஷ்ட்ரீய கோகுல் மிஷன், விவசாயிகளின் வீடுகளுக்கு நேரடியாக செயற்கை கருவூட்டல் திட்டம், கா்ப்பகால மாடுகளுக்கு மானியம், கால்நடைகளுக்கு காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றின் மூலம் 3.74 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனா். பால் பதப்படுத்தலுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கால்நடை வளா்ப்பு, பால்பண்ணை, பால் உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றுக்கு 27.65 லட்சம் வேளாண் கடன் அட்டைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் ரூபாலா.