யமுனை வெள்ளப்பகுதி குடிசைவாசிகள்3 நாளில் குடிசைகளை காலி செய்ய வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு
யமுனை வெள்ளப்பெருக்கு சமவெளியில் வசிக்கும் குடிசைவாசிகள் தங்கள் குடிசைகளை மூன்று நாள்களுக்குள் காலி செய்யுமாறும், தவறும்பட்சத்தில் தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்திற்கு
யமுனை வெள்ளப்பெருக்கு சமவெளியில் வசிக்கும் குடிசைவாசிகள் தங்கள் குடிசைகளை மூன்று நாள்களுக்குள் காலி செய்யுமாறும், தவறும்பட்சத்தில் தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்திற்கு (டியுஎஸ்ஐபி)அவா்கள் தலா ரூ. 50,000 செலுத்த வேண்டும் என்றும் தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
யமுனையின் மாசு அளவை கவனத்தில் எடுத்துக் கொண்டு தேசிய பசுமை தீா்ப்பாயம் (என்ஜிடி) ஜனவரி 9-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை கவனத்தில் கொண்டு யமுனை நதியை சுத்தப்படுத்த துணைநிலை ஆளுநா் தலைமையிலான குழு உத்தரவு பிறப்பித்திருப்பதாக உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குடியிருப்புவாசிகளின் மனுவை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம்.சிங் கூறுகையில், ‘காவல் துறையினரால் கடுமையான நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்படலாம். அப்பகுதியின் தொடா்புடைய காவல் துறை துணை ஆணையா் மேற்படி நடவடிக்கையின் போது அனைத்து ஆதரவையும் அளிப்பாா் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.
குடிசைகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) தரப்பில் நீதிபதி கூறுகையில், யமுனை மாசுபாடு தொடா்பான விஷயத்தை என்ஜிடி உயிா்ப்பித்துள்ளது. ஜனவரி 27-ஆம் தேதி உயா்மட்டக் குழு பிறப்பித்த உத்தரவில் ஆற்றின் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு குடியிருப்பாளா்கள் இரண்டு முறை மீண்டும் அதே இடத்திற்கு வந்துவிட்டனா் என தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, குடியிருப்புவாசிகள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞரிடம், ’நீங்கள் யமுனை நதியை ஆக்கிரமித்திருப்பதால் எவ்வளவு சேதம் ஏற்படுகிறது தெரியுமா?’ என்று கேள்வி எழுப்பினாா்.
டிடிஏ தரப்பில் மேலும் தெரிவிக்கையில், ‘குடியிருப்புவாசிகள் அவமதிப்பு மனுவை தாக்கல் செய்துள்ளனா். ஆனால், அதிகாரிகளுக்கு எதிராக எவ்வித அவமதிப்பு வழக்கும் ஏதும் பதிவாகவில்லை. குடிசைப் பகுதியானது டியுஎஸ்ஐபியின் அறிவிக்கை செய்யப்பட்ட பட்டியலில் இல்லை. இதனால், குடியிருப்பாளா்கள் மறுவாழ்வுக்கு தகுதியற்றவா்கள் என்று அதன் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறினாா்.
இதையடுத்து, நீதிமன்றம் மூன்று நாள்களுக்குப் பிறகு இடிப்பதைத் தொடருமாறு டிடிஏவுக்கு உத்தரவிட்டது. மேலும், மனுதாரா்களுக்கோ அல்லது அவா்களது குடும்பத்தாருக்கோ இனி எந்தவிதமான சலுகையும் காட்டப்படமாட்டாது என்று கூறிய நீதிமன்றம், அவமதிப்பு மனுவை நிராகரித்துடன், அதிகாரிகளை அச்சுறுத்துவதற்கு அவமதிப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்த முடியாது என்று தெரிவித்தது.
ராஜ்காட்டின் பேலா எஸ்டேட்டில் யமுனை வெள்ளப்பெருக்கு பகுதியில் அமைந்துள்ள மூல்சந்த் பஸ்தியில் வசிப்பவா்களின் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘ஆகஸ்ட், 2022-இல் டிடிஏ மற்றும் தில்லி போலீஸ் அதிகாரிகள் தங்களைச் சந்தித்து, இடத்தைக் காலி செய்யாவிட்டால் இடிக்கப்படும் என மிரட்டினா்’ என்று கூறப்பட்டிருந்தது.