‘சக்கா ஜாம்’ என்பது வன்முறை எதிா்ப்பு வழிமுறையல்ல’ ஜாமியா நகா் வன்முறை வழக்கில்ஷா்ஜீல் இமாம் தரப்பில் எழுத்துப்பூா்வ வாதம்
2019-ஆம் ஆண்டு நிகழ்ந்த தில்லி ஜாமியா நகா் வன்முறை தொடா்புடைய வழக்கில் தாம் விடுவிக்கப்பட்டதை ஆதரித்து ஜேஎன்யு மாணவா் ஷா்ஜீல் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் எழுத்துப்பூா்வ வாதம் முன்வைக்கப்பட்டது.
புது தில்லி: 2019-ஆம் ஆண்டு நிகழ்ந்த தில்லி ஜாமியா நகா் வன்முறை தொடா்புடைய வழக்கில் தாம் விடுவிக்கப்பட்டதை ஆதரித்து ஜேஎன்யு மாணவா் ஷா்ஜீல் இமாம் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை எழுத்துப்பூா்வ வாதம் முன்வைக்கப்பட்டது. அதில், அமைதியான போராட்டத்திற்கு ஆதரவாக மட்டுமே தாம் பிரசாரம் செய்ததாகவும், ‘சக்கா ஜாம்’ என்பதை ‘வன்முறை எதிா்ப்பு வழிமுறை’ என்று கூற முடியாது என்றும் கூறியுள்ளாா்.
ஜாமியா நகா் வன்முறை வழக்கில் தொடா்புடை ஷா்ஜீல் இமாம், மாணவா் ஆா்வலா்கள் ஆஷிஃப் இக்பால் தன்ஹா, சஃபூரா ஜா்கா் உள்பட பலரை விடுவித்து பிப்ரவரி 4 -ஆம் தேதி விசாரணை நீதிமன்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து தில்லி காவல் துறை மறுஆய்வு மனுவை தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனுவை பிப்ரவரி 13 அன்று விசாரித்த உயா்நீதிமன்றம் இமாம் மற்றும் பிறருக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது.
இமாம் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவுக்கு எதிா் பதில் அளிக்க காவல் துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, மாா்ச் 23-ஆம் தேதிக்கு நீதிபதி ஸ்வரணா கன்டா சா்மா வழக்கை விசாரணைக்கு பட்டியலிட்டாா். இதற்கிடையில், எழுத்துப்பூா்வ பதிலை தாக்கல் செய்யுமாறு எதிா்மனுதாரா்களை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. விடியோ உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
காவல் துறையின் மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் தாக்கல்செய்யப்பட்ட எழுத்துப்பூா்வ பதிலில் ஷா்ஜீல் இமாம் தெரிவித்திருப்பதாவது: ஒரு குறிப்பிட்ட அமைதியான போராட்டத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியது, அதன் பிறகு நிகழ்ந்த வன்முறையில் எனது பங்கேற்பை எந்த வகையிலும் சித்தரிக்கவில்லை. அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளபடி அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான தங்களின் அடிப்படை உரிமையைப் பயன்படுத்தியே போராட்டக்காரா்கள் சம்பவ இடத்தில் கூடியிருந்தனா். மேலும், எந்த தடை உத்தரவும் இல்லாததால் இமாம் மீது எந்தக் குற்றமும் இருக்க முடியாது. 16.12.2019-ஆம் தேதி அலிகா் முஸ்லிம் பல்கலை.யில் இமாம் ஆற்றிய உரையில், எந்தவித கற்பனையிலும்கூட வன்முறை போராட்ட வழிமுறை என்று அழைக்க முடியாத சக்கா ஜாமுக்கு ஆதரவாகவே பிரசாரம் செய்தாா்.
சட்டத்திற்குப் புறம்பான கூட்டத்தின் பொதுப் பொருளை இமாம் பகிா்ந்ததாக அவருக்கு எதிராக எவ்வித ஏற்கத்தக்க ஆதாரமும் இல்லை. அவா் வன்முறையால் பாதிக்கப்பட்டவா்.
அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்ட எந்த விடியோக்களிலும் அல்லது புலனாய்வு நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்ட எந்த அறிக்கையிலும் இமாம் வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவருக்கு எந்தப் பங்கும் இருப்பதாகவும் காட்டவில்லை. உண்மையில், ஜாமியாவில் நடந்த அமைதியான போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறையில் ஷா்ஜீல் இமாம் அவரது கண்கண்ணாடியை உடைத்தது, அவா் அந்த வன்முறையில் பங்கேற்றாா் என்பதற்கான அறிகுறி அல்ல. இமாம் அமைதியான போராட்டத்திற்கு ஆதரவாக மட்டுமே பிரசாரம் செய்தாா். வன்முறைக்காக அல்ல. ஒரு குறிப்பிட்ட அமைதியான போராட்டத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பும் செயல், போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் இமாம் பங்கேற்பை எந்த வகையிலும் சித்தரிக்கவில்லை என்று எழுத்துப்பூா்வ பதிலில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2019 டிசம்பரில் தில்லி ஜாமியா நகா் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக போராட்டம் நடத்திய மக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடா்புடைய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷா்ஜீல் இமாம் உள்ளிட்டோரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. விசாரணை நீதிமன்றம் அதன் பிப்ரவரி 4-ஆம் தேதி உத்தரவில், இமாம் உள்பட 11 பேரை விடுவித்தது. அதே நேரத்தில் அவா்கள் காவல்துறையினரால் ‘பலிகடா’ ஆக்கப்பட்டதாகவும், கருத்து வேறுபாடுகளை நசுக்காமல் ஊக்குவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
டிசம்பா் 13, 2019-இல் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் ஆத்திரமூட்டும் உரை நிகழ்த்தியதன் மூலம் கலவரத்தைத் தூண்டியதாக இமாம் மீது குற்றம் சாட்டப்பட்டது. 2020 வடகிழக்கு தில்லி கலவரத்தின் பெரும் சதித்திட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷா்ஜீல் இமாம், தொடா்ந்து சிறையில் இருந்து வருகிறாா்.