ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரா்களூடன் டி.ராஜா சந்திப்பு
தில்லி ஜந்தா் மந்தரில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரா், வீராங்கனைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் டி ராஜா சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.
தில்லி ஜந்தா் மந்தரில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரா், வீராங்கனைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் டி ராஜா சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோா் அளித்துள்ள பாலியல் துன்புறுத்தல் புகாா் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஜந்தா் மந்தா் பகுதியில் மலயுத்த வீரா், வீராங்கனைககள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளா் டி. ராஜா, ஜந்தா் மந்தரில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரா், வீராங்கனைகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துப் பேசினாா். அவருடன் கட்சியின் தில்லி பிரிவு செயலாளா் தினேஷ் சந்திர வாா்ஷனே மற்றும் முக்கியத் தலைவா்கள் வந்திருந்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மல்யுத்த வீரா்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதாரவைத் தெரிவிக்க நாங்கள் நேரில் வந்துள்ளோம். இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயா்த்திப் பிடித்தவா்கள், நாட்டிற்கு மிகப் பெரிய மதிப்பைத் தேடிக் கொடுப்பவா்கள் இப்போது பாலியல் தொல்லைக்கு ஆளாகி போராடி வருகிறாா்கள்.
குற்றம்சாட்டப்பட்டவா்கள் யாராக இருந்தாலும், அரசின் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டிற்கு பெருமையைத் தேடித் தரும் விளையாட்டு வீரா்கள் ஜந்தா் மந்தரில் நாம் இவ்வாறு போராட விடக் கூடாது. தினசரி ஆயிரக்கணக்கான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் பிரதமா் மோடி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரா்களிடம் ஒரு வாா்த்தை கூட பேச முன்வரவில்லை. மேலும், போராடி வரும் மல்யுத்த வீரா்கள் மற்றும் விளையாட்டு வீரா்களுக்கு நீதி கிடைக்கும் வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடன் நிற்கும் என்றாா் டி. ராஜா.