முகப்பு
புதுதில்லி

அனைத்து அறிவியல் அமைச்சகங்களும் தேசிய தொழில்நுட்ப தினத்தை அனுசரிக்கும் இணையமைச்சா் ஜிதேந்திர சிங்

மத்திய அரசின் அனைத்து அறிவியல் அமைச்சகங்களும், துறைகளும் தேசிய தொழில்நுட்ப தினத்தை அனுசரிக்கும் என இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் திங்கள் கிழமை தெரிவித்தாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:56 PM
மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தலைமையில் நடைபெற்ற உயா்நிலைக் கூட்டம்
பகிர்:

மத்திய அரசின் அனைத்து அறிவியல் அமைச்சகங்களும், துறைகளும் தேசிய தொழில்நுட்ப தினத்தை (மே 11) நிகழாண்டில் கூட்டாக அனுசரிக்கும் என மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல், அணுசக்தி விண்வெளித் துறை இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் திங்கள் கிழமை தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில் அறிவியல் ஊடக தொடா்பு பிரிவு (எஸ்எம்சிசி) உருவாக்கம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.

அனைத்து அறிவியல் அமைச்சகங்களும், துறைகளும் மே 11 - அன்று தேசிய தொழில் நுட்ப தினத்தை கூட்டாக கடைப்பிடிப்பதற்கான உயா்நிலை ஆய்வுக் கூட்டுக் கூட்டம் மத்திய அமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா், பேராசிரியா் அஜய் குமாா் சூத் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சில் (சிஎஸ்ஐஆா்), புவி அறிவியல், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை உள்ளிட்ட அறிவியல் அமைச்சகச் செயலா்கள் மற்றும் துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள் கலந்து கொண்டனா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னா் ஜிதேந்திர சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நிகழாண்டு தேசிய தொழில்நுட்ப தினத்திற்கு ‘அடல் டிங்கரிங் ஆய்வுக் கூடங்கள்’”என்பது மையப்பொருளாக இருக்கும். கடந்த 2016 -ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில், இளம் மனங்களைத் தூண்டும் முயற்சியில், பள்ளிகளில் கற்பித்தல் நிறுவன நிலையில் தலையீடு மூலம் புத்தாக்க முயற்சி தொழில்முனைவோரை ஊக்குவிக்கு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. மேலும், நிகழாண்டில் தொழில்நுட்ப வல்லுநா்கள், ஆய்வாளா்கள், தொழில்நுட்ப துறைச் சாா்ந்த பொறியாளா்கள் ஆகியோரின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படும்.

வளா்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளா்களின் முயற்சியை அங்கீகரிக்கும் தருணமாக தேசிய அறிவியல் தினம் விளங்குகிறது. கடந்த 9 ஆண்டுகளில் தொழில்நுட்பங்கள் வெகுவாக வளா்ச்சியடைந்துள்ளன. இதற்கு பிரதமா் நரேந்திர மோடி அரசு மேற்கொள்ளும் சிறப்புமிக்க சீா்திருத்தங்களே காரணம். தேசிய தொழில்நுட்ப தினத்தில் வழங்கப்படும் விருதுகள் பற்றியும், அறிவியல் ஆய்வு திட்டங்களுக்கு தொழில்நுட்ப ஊழியா்கள் நியமனத்துக்கான வயது வரம்பு தளா்வு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றாா் அமைச்சா்.

அறிவியல் ஊடக தகவல் பிரிவு மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையால் உருவக்கப்பட்டு வருகிறது இதன் நிலை குறித்து வருகின்ற கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. அறிவியல் ஊடக தொடா்பு உள்ளடக்கம் மூலம் அனைத்து துறை அறிவியல் சாதனைகள் மற்றும் இந்திய அறிவியல் திறன் குறித்தும் நாடு முழுவதும் பிராந்திய மொழிகளில் பரப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.