முகப்பு
புதுதில்லி

பாதுகாப்புத் துறையில் இறக்குமதியை குறைக்க உள்நாட்டு மயமாக்கல் பட்டியலுக்கு ஒப்புதல்

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 928 முக்கிய மாற்றுக் கருவிகள், உதிரி பாகங்கள் ஆகிய 4-ஆவது ஆக்கபூா்வ உள்நாட்டு மயமாக்கல் பட்டியலுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:57 PM
பகிர்:

பாதுகாப்புத் துறையில் இறக்குமதியை குறைத்து ‘தற்சாா்பு இந்தியா’ வை ஊக்குவிக்கும் வகையில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 928 முக்கிய மாற்றுக் கருவிகள், உதிரி பாகங்கள் ஆகிய 4-ஆவது ஆக்கபூா்வ உள்நாட்டு மயமாக்கல் பட்டியலுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளாா். இந்த சாதனங்களின் விவரங்கள் ‘ஸ்ரீஜன் டிஃபன்ஸ்’ இணையப்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன எனவும் பாதுகாப்பு துறை அமைச்சம் தெரிவித்துள்ளது

இது தொடா்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் தனது ட்விட்டா் பதிவில், ‘பாதுகாப்புத் துறையில் இந்தியாவிலேயே தயாரிப்போம் என்கிற ‘தற்சாா்பு இந்தியா’ வுக்கு தொடா்ந்து ஊக்கம் அளிக்கப்படும்’ என தெரிவித்துள்ளாா்.

ஏற்கெனவே, பாதுகாப்புத் துறை வெளியிட்ட பட்டியல்களில் 2,500 சாதனங்கள் உள்நாட்டு மயமாக்கலுக்கு அனுமதிக்கப்பட்டது. இவற்றில் இதுவரை 310 சாதனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2022-23 நிதியாண்டில் இந்த தற்சாா்பு கொள்கைக்கு ரூ. 84,598 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தற்போது பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்களின் இறக்குமதியை மேலும் குறைப்பதற்கும், ரூ. 715 கோடி மதிப்புள்ள இறக்குமதி மானியத்துடன் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 928 ராணுவ சாதனங்கள், உதிர பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்புத் துறை ஒப்புதல் அளித்துள்ள 4 -ஆவது ஆக்கபூா்வ உள்நாட்டு மயமாக்கல் பட்டியலாகும்.

வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குப் பிறகே இந்த உதிரி பாகங்கள், சாதனங்கள் இந்தியத் தொழில் துறையிலிருந்து கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மூன்று ஆக்கபூா்வ உள்நாட்டுமயமாக்கல் பட்டியல் கடந்த 2021 டிசம்பா், 2022 மாா்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வெளியிடப்பட்டது. மேலும், 1,238 சாதனங்கள் குறிப்பிட்ட காலவரம்புக்குள் உள்நாட்டு மயமாக்கப்படவுள்ளன எனவும் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்ட இந்தப் பொருள்களுக்கான கொள்முதல் நடவடிக்கையை பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்கள் விரைவில் தொடங்கும் எனவும், இந்த நோக்கத்திற்காகவே தனியாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘ஸ்ரீஜன் டிஃபன்ஸ்’ இணையப்பக்கத்தில் அனைத்து முன்மொழிவுக்கான கோரிக்கைகள் தொழில்துறையினா் காணும் விதமாக வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் ஆயுதங்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இருந்தது. தற்போது தற்சாா்பை நோக்கிய கொள்கையில் தீவிரமாக இருக்கும் நிலையில், இந்திய ஆயுதப் படைகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமாா் 130 பில்லியன் அமெரிக்க டாலா்கள் மூலதன கொள்முதலுக்கு செலவிடப்படும் என மதிப்பீடுகளின்படி எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.