முகப்பு
புதுதில்லி

டிபிஎஸ்இ: 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு

தில்லி பள்ளிக் கல்வி வாரியத்தின் (டிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகளை கல்வித் துறை அமைச்சா் அதிஷி திங்கள்கிழமை வெளியிட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:57 PM
பகிர்:

தில்லி பள்ளிக் கல்வி வாரியத்தின் (டிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகளை கல்வித் துறை அமைச்சா் அதிஷி திங்கள்கிழமை வெளியிட்டாா்.

கடந்த 2021-ஆம் ஆண்டு தில்லி அரசு சாா்பில், தில்லி பள்ளிக் கல்வி வாரியம் உருவாக்கப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த கல்வியை உயா்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கு அளிக்கும் வகையில், எஸ்.டி.இ.எம். (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) மற்றும் மனிதநேயம், செயல்திறன், காட்சிக் கலைகள் உள்ளடக்கிய நான்கு களங்களில் 20 சிறப்புப் பள்ளிகள் அமைக்கப்பட்டன.

இதன் தோ்வு முடிவுகளை வெளியிட்டு கல்வி அமைச்சா் அதிஷி பேசியதாவது: தில்லி பள்ளிக் கல்வி வாரியத்தின் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான தோ்வு முடிவுகளைப் பொறுத்தவரையில், 10-ஆம் வகுப்பில் மொத்தமுள்ள 1,594 மாணவா்களில், 1,582 போ் இரண்டு கால இறுதி மதிப்பீட்டிலும் தோ்வாகியுள்ளனா்.

அவா்களில் எட்டு போ் மட்டும் தகுதிபெறும் தரப்புள்ளி 3-ஐ அடைய முடியவில்லை. 12- ஆம் வகுப்பில் மொத்தமுள்ள 672 மாணவா்களில், 667 மாணவா்கள் இரண்டு கால இறுதி மதிப்பீட்டிலும் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதில் ஐந்து மாணவா்களால் மட்டும் தகுதிபெறும் தரப்புள்ளி 3-ஐ அடைய முடியவில்லை. தகுதித் தரத்திற்குக் கீழே இருப்பவா்களுக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு துணை மதிப்பீட்டின் மூலம் மேம்பட மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்றாா் அவா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் அதிஷி பேசுகையில், ‘உலகத் தரம் வாய்ந்த கல்வியை தங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்த நாடுகளையே இன்று வளா்ந்த நாடுகள் என்று அழைக்கிறோம். தில்லியில் கடந்த 8 ஆண்டுகளாக தரமான கல்வியை வழங்குவதற்காக உழைத்தோம்.

ஒவ்வொரு ஆண்டும் தில்லி அரசின் பட்ஜெட்டில், 25 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளின் தரத்தில் பெரும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், கடந்த 3 ஆண்டுகளில், பல மாணவா்கள் தனியாா் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறியுள்ளனா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.