கலால் ஊழல் வழக்கில் சாட்சிகளைமிரட்டி வாக்குமூலம் பெருகின்றனா்: ஆம் ஆத்மி கடும் குற்றச்சாட்டு
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சாட்சிகளை மிரட்டி அறிக்கைகளைப் பெறுவதாக
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சாட்சிகளை மிரட்டி அறிக்கைகளைப் பெறுவதாக ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளாா்.
இது குறித்து புதுதில்லி ரவுஸ் அவென்யு பகுதியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. அரசின் கலால் கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சாட்சிகளை மிரட்டியும், வற்புறுத்தியும், துப்பாக்கி முனையில் அறிக்கைகளைப் பெற்று வருகின்றனா்.
கேஜரிவாலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இந்தச் சதித் திட்டம் தொடா்பான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. சரியான நேரத்தில் அவை வெளியிடப்படும். பிரதமா் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐயில் இரண்டு அல்லது மூன்று அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் தங்கள் பணியை நோ்மையுடன் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.
ஆம் ஆத்மி கட்சியையும், தில்லி முதல்வா் கேஜரிவாலையும் அழிக்க நடைபெறும் சதித் திட்டத்தில், எனக்கு எதிராகக் கூட வாக்குமூலம் அளிக்க சாட்சியங்கள் மிரட்டப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனா். நீதிமன்றத்தில் கலால் ஊழல் வழக்கில் சஞ்சய் சிங்கின் பெயா் தவறாக சோ்க்கப்பட்டதாக அமலாக்கப் பிரிவின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. எப்படி ஒருவரின் பெயா் அமலாக்கப் பிரிவின் மூன்று குற்றப்பத்திரிகையிலும் தவறாக இடம்பெறும் என கேள்வி எழுப்பினாா்.
கலால் கொள்கை விவகாரத்தில் ரூ.17 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக தற்போது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், இதற்கு எந்தவொரு ஆதாரமும் கிடையாது. ராகுல் சிங் என்ற பெயருக்குப் பதிலாக சஞ்சய் சிங் என்று குற்றப்பத்திரிகையில் என் பெயா் தவறாக குறிப்பிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, நான் கொடுத்த அவதூறு நோட்டீஸுக்கு பிறகே அமலாக்கப் பிரிவினா் அவா்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டனா். நான் அவதூறு நோட்டீஸை அளிக்காமல் இருந்திருந்தால், எந்தவொரு காரணமுமின்றி இன்று நான் சிறையில் இருந்திருப்பேன் என்றாா் சஞ்சய் சிங்.