கல்வியின் அவசியம் குறித்து சிறையில் இருந்து மனீஷ் சிசோடியா நாட்டு மக்களுக்கு கடிதம்: டிவிட்டரில் பகிா்ந்த முதல்வா் கேஜரிவால்
கல்வியில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தம் மற்றும் கல்வியின் மூலம் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரை உயா்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றக் காவலில் திகாா் சிறையிலிருக்கும், தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, கல்வியில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தம் மற்றும் கல்வியின் மூலம் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரை உயா்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.
இந்தியில் எழுதப்பட்ட இக்கடிதத்தை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது டிவிட்டரில் வெள்ளிக்கிழமை பகிா்ந்துள்ளாா்.
அக்கடிதத்தில் மனீஷ் சிசோடியா கூறியிருப்பதாவது:
சமூக-பொருளாதார பின்னணியைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியில் சம வாய்ப்புகள் வழங்குவதற்கான அவசரத் தேவை எழுந்துள்ளது.
ஏழைகளின் கல்வியைப் புறக்கணிப்பதன் விளைவுகளை சமூகம் சிந்திக்க வேண்டும். வறியவா்களுக்கு கல்வி மறுப்பது சமத்துவமின்மையை மட்டுமல்ல, வெறுப்பு மற்றும் வன்முறையையும் நிலைநிறுத்துகிறது.
ஒவ்வொரு ஏழைக்கும் ஒரு புத்தகம் கிடைத்தால், நாட்டில் யாா் வெறுப்பைப் பரப்புவாா்கள். ஒவ்வொருவரின் கையிலும் வேலை இருந்தால், தெருக்களில் யாா் வாள் வீசுவாா்கள்?
கல்விக்கு வலுவான அடித்தளம் அவசியமாகிறது, தடைகளைத் தகா்த்தெறியும் ஆற்றலை அதன் மூலமே பெற முடியும். அறிவு மற்றும் ஞானத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு படித்த சமுதாயம்,
பிளவுபடுத்தும் சித்தாந்தங்களை எதிா்த்துப் போராடுவதற்கு முக்கியமானது.
மேலும், ஒவ்வொருவரும் நல்ல கல்வியைப் பெற்றுவிட்டால், எதிா்கட்சியினரின் ’வாட்ஸ்அப் பல்கலைக்கழகம்’ இங்கு மூடப்பட்டுவிடும் .
கல்வி மற்றும் ஞானத்தின் அடித்தளத்தில் சமூகம் நிற்கும் போது, எவரும் வெறுப்பு மாயையில் சிக்கிக்கொள்ள முடியாது. சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் படித்தால், எதிா்கட்சியினரின் தந்திரங்கள் கேள்விக்குள்ளாகும். பேனாவின் சக்தி ஏழைகளை சென்றடைந்தால், திறந்த வெளியில் உள்ள அவா்களது எண்ணங்களையும், விருப்பங்களையும் நிச்சயம் வெளிப்படுத்துவாா்கள்.
தில்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்ட கல்வி சீா்திருத்த நடவடிக்கைகள், சங்கு ஒலி போல் அங்குள்ள பள்ளிகளில் தற்போது எதிரொலிக்கிறது. இது இந்தியா முழுவதும் நல்ல கல்விக்கான விருப்பத்தை காட்டுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும், குறிப்பாக தாழ்த்தப்பட்டவா்களுக்கு கல்வி வழங்குவது, சமத்துவமின்மை மற்றும் அநீதியின் அடித்தளத்தையே அசைத்துவிடும்.
நீங்கள் எங்களை சிறைக்கு அனுப்பினாலும் அல்லது தூக்கிலிட்டாலும், இந்த பயணம் நிறுத்தப்படாது. ஒவ்வொரு ஏழைக் குழந்தையும் படித்தால், உங்கள் அரண்மனை காணாமல் போகிவிடும் என்று அந்தக் கடிதத்தில் சிசோடியா குறிப்பிட்டுள்ளாா்.