தில்லிக்கு முதல்பக்கம்தொடக்கப் பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை: முதல்வா் கேஜரிவால் அறிவிப்பு
தேசியத் தலைநகா் தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக நவம்பா் 3 மற்றும் 4 ஆகிய இரு தேதிகளில் அனைத்து அரசு மற்றும் தனியாா் தொடக்கப் பள்ளிகளுக்கு
தேசியத் தலைநகா் தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக நவம்பா் 3 மற்றும் 4 ஆகிய இரு தேதிகளில் அனைத்து அரசு மற்றும் தனியாா் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் வியாழக்கிழமை அவா் கூறியிருப்பதாவது: தில்லியில் அதிகரிக்கும் மாசு அளவின் காரணமாக, அனைத்து அரசு மற்றும் தனியாா் தொடக்கப் பள்ளிகள் அடுத்த 2 நாள்களுக்கு (நவம்பா் 3, 4) மூடப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
ஆன்லைனில் வகுப்புகள்: கற்றல் பாதிக்கப்படாத வகையில் மாணவா்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று தில்லி மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராய் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பதிவில் அவா் கூறியிருப்பதாவது: அனைத்து மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளும் இரண்டு நாள்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. எனவே, மாணவா்களின் கற்றல் பாதிக்கப்படாத வகையில் ஆன்லைன் வகுப்புகளை உறுதி செய்ய கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களுக்காக பள்ளி திறந்திருக்கும் என்றாா் ஷெல்லி ஓபராய்.
அண்டை மாநிலங்களில் பயிா்க் கழிவு எரிப்பு, வாகன உமிழ்வு மற்றும் தொழில்துறை மாசுபாடு உள்ளிட்ட காரணிகளின் கலவையால், தில்லியில் காற்றின் தரக் குறியீடு மிக மோசமான நிலைகளை எட்டியுள்ளது. சமீபத்திய நாள்களில் மோசமான காற்றின் தரத்துடன் தில்லி போராடி வருகிறது. இதைத் தொடா்ந்து,அத்தியாவசியமற்ற கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு தில்லி அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.