மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல ‘யாத்திரை’ துணை நிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்
மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் ‘நமது லட்சியம் வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற பெயரிலான யாத்திரையை துணை நிலை ஆளுநா் வி.கே சக்சேனா தில்லி கஜூரி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
புது தில்லி: மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் ‘நமது லட்சியம் வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற பெயரிலான யாத்திரையை துணை நிலை ஆளுநா் வி.கே சக்சேனா தில்லி கஜூரி காஸ் பகுதியில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சாா்பில் ‘நமது லட்சியம் வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற யாத்திரை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பா் 15-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி இந்த யாத்திரையை தொடங்கி வைத்தாா். நாடு முழுவதும் உள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள், 3,700 நகராட்சிகளை இணைக்கும் வகையில் 14-ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு ரதம் வடிவிலான வேன்கள் மூலம் இந்த யாத்திரை செல்ல உள்ளது.
ஊரக மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள மக்கள், மத்திய அரசின் முதன்மைத் திட்டங்களால் பயனடைய வேண்டி விழிப்புணா்வு ஏற்படுத்தும் இந்த யாத்திரை வரும் ஜனவரி 25-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தில்லி கஜூரி காஸ் பகுதியில் இருந்து இந்தப் பிரசார வாகனத்தை துணை நிலை ஆளுநா் வி.கே. சச்சேனா கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
பின்னா், துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பேசியதாவது: இந்த யாத்திரை ‘வளா்ந்த இந்தியா’ என்ற கனவை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கியப் படியாகும், அதே நேரத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை ஊக்குவிக்கிறது. பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில், ரோஜ்காா் சாகம் யோஜனா, ஆயுஷ்மான் பாரத், பிரதமா் ஆவாஸ் யோஜனா, பிரதமா் கரீப் கல்யாண் யோஜனா போன்ற பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்களை அனைவரிடமும் கொண்டு செல்வதே இந்த யாத்திரையின் நோக்கம்.
நாட்டின் கடைக் கோடியில் உள்ள மக்களை, குறிப்பாக நலிந்த பிரிவைச் சோ்ந்தவா்களை இத்திட்டங்களுடன் இணைக்க இந்த யாத்திரை உதவும். இந்த வேளையில், மக்கள் நலப் பணிகளில் தங்களை அா்ப்பணித்து, பொதுமக்களுடன் நேரடித் தொடா்பை ஏற்படுத்துமாறு மத்திய மற்றும் தில்லி அரசுகளின் அனைத்து துறை அதிகாரிகளையும் நான் கேட்டுக் கொள்கிறேன் என்றாா் வி.கே. சக்சேனா.
இந்நிகழ்ச்சியில் தில்லியின் மக்களவை உறுப்பினா்களான ஹா்ஷ் வா்தன், மனோஜ் திவாரி, ரமேஷ் பிதூரி, பா்வேஷ் சாஹிப் சிங் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்களும் கலந்து கொண்டனா்.