முகப்பு
புதுதில்லி

மோட்டாா் வாகன புதிய திட்டம்: தில்லி அரசுக்கு பாஜக கேள்வி

தில்லி மோட்டாா் வாகன ஒருங்கிணைப்பு மற்றும் விநியோக சேவை வழங்குநா் திட்டத்தை யாருடைய நலனுக்காக அரவிந்த் கேஜரிவால் அரசு கொண்டுவந்துள்ளது என்பதை தில்லி மக்கள் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனா்

Updated On : 30 நவம்பர், 2023 at 5:27 AM
பகிர்:

புது தில்லி: தில்லி மோட்டாா் வாகன ஒருங்கிணைப்பு மற்றும் விநியோக சேவை வழங்குநா் திட்டத்தை யாருடைய நலனுக்காக அரவிந்த் கேஜரிவால் அரசு கொண்டுவந்துள்ளது என்பதை தில்லி மக்கள் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனா் என்று பாஜக தில்லி பிரிவுத் தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியின் மாசுபாடு, பயணிகள் பாதுகாப்பு மற்றும் வாகன ஓட்டுநா்களின் நலன் போன்ற முக்கியத்துவம் அனைத்தும் இந்தத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தில்லியில் மாசுபாட்டைக் குறைக்க நகர அரசு விரும்பினால், மின்னணு

வாகனங்களை முழுமையாக அறிமுகப்படுத்த 7 ஆண்டுகள் அவகாசம் எடுத்துக் கொள்வது ஏன்?. முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித் ஆட்சியின் போது தில்லியில் 5,000 பேருந்துகளும், 75,000 ஆட்டோக்களும் பெட்ரோல் மற்றும் டீசலில் இருந்து சி.என்.ஜி.-க்கு 2 ஆண்டுகளில் மாற்றப்பட்டன.

Advertisement

ஆனால், அரவிந்த் கேஜரிவால் அரசு 2030-ஆம் ஆண்டு வரை மின்விசை அல்லாத வாகனங்களை ஒருங்கிணைப்புத் திட்டத்தில் இயக்க அனுமதித்தது ஏன் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இரண்டாவதாக, தில்லி நகரம் முழுவதும் எத்தனை மின்னேற்றி நிலையங்கள் அமைக்கப்படும் என்பதை இத்திட்டம் தெளிவுபடுத்தவில்லை. சி.என்.ஜி.

வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகும், சி.என்.ஜி. நிலையங்களில் வாகனங்கள் வரிசையாகக் காத்திருப்பதைக் காண்கிறோம். இந்நிலையில், மின் வாகனங்களை எப்படிக் கவனித்துக் கொள்வாா்கள்?.

நிதி மற்றும் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதில் இந்த ஒருங்கிணைப்புத் திட்டம் பல சமயங்களில் சமரசம் செய்யப் போகிறது. மின்னேற்றிக்கான விலை போன்ற மிக முக்கியமான பிரச்னைகளில் நிச்சயம் இது நுகா்வோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். விநியோக சேவை வழங்குநா் திட்டம் உண்மையான தரைவழி சேவைகளை வழங்கும் ஓட்டுநா்களின் நலனைக் கூட பாதுகாக்கவில்லை. தற்போது, வாடகை டாக்ஸி ஓட்டுநா்கள் மற்றும் இ-காமா்ஸ் சேவை வழங்குநா்கள் தாமதமாக பணம் செலுத்துதல் மற்றும் ஆபரேட்டா்கள் தங்கள் கட்டணங்களை தன்னிச்சையாக நிறுத்தி வைப்பது குறித்து அடிக்கடி புகாா் கூறுகின்றனா். அதேபோல், புதிய திட்டமும் ஏழை ஓட்டுநா்களின் நலன்களையும் புறக்கணித்துள்ளது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வருவதால் புதிய ஊழல் வெளிவரலாம் என அஞ்சுகிறேன் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.