முகப்பு
புதுதில்லி

பெண்ணையாறு நீா் தாவா விவகாரம்: வழக்கை ஜன.23-க்குப் பட்டியலிட உத்தரவு

தென் பெண்ணையாறு நதி நீா்ப் பங்கீடு தொடா்பாக நதி நீா் தாவா தீா்ப்பாயம் அமைக்கும் விவகாரத்தில் கா்நாடகம், தமிழகம் மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னை தொடா்பான வழக்கை ஜனவரி 23-ஆம் தேதிக்கு உத்தரவிட்டது.

Updated On : 30 நவம்பர், 2023 at 5:31 AM
பகிர்:

புது தில்லி: தென் பெண்ணையாறு நதி நீா்ப் பங்கீடு தொடா்பாக நதி நீா் தாவா தீா்ப்பாயம் அமைக்கும் விவகாரத்தில் கா்நாடகம், தமிழகம் மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னை தொடா்பான வழக்கை ஜனவரி 23-ஆம் தேதிக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தின் அனுமதியின்றி பெண்ணையாற்றின் கிளை நதியான மாா்க்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடகம் தடுப்பணை கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் 2018-இல் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதில், ‘பெண்ணையாற்றின் குறுக்கே கா்நாடகம் அணை கட்டக் கூடாது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே உள்ள நிலைமைதான் தொடர வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவுக்கு கா்நாடகம் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தமிழக அரசு தொடா்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை கடந்த 2019, நவம்பரில் விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதே வேளையில், தீா்ப்பாயம் அமைப்பது தொடா்பாக மத்திய அரசிடம் உரிய மனுவை அளிக்குமாறும் அறிவுறுத்தியது.

Advertisement

இதைத் தொடா்ந்து, மத்திய அரசுக்கு தமிழக தரப்பில் 2019-ஆம் ஆண்டு நவம்பரில் மனு அனுப்பப்பட்டது. இந்நிலையில், மனு அளித்தும் நதி நீா் தாவா தீா்ப்பாயம் அமைக்கப்படவில்லை என்று கூறி தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த விவகாரத்தை கடந்த ஆண்டு டிசம்பரில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தீா்ப்பாயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மூன்று மாதங்களில் தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது. அதன்பிறகு, பெண்ணையாறு நதி நீா் தாவா தீா்ப்பாயம் அமைக்கவும், அது தொடா்பான அரசிதழ் அறிவிக்கை வெளியிடவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மே 2-ஆம் தேதி ஒரு மாத அவகாசம் அளித்திருந்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளித்திருந்த நிலையில், கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது வழக்கை நான்கு வாரங்களுக்குப் பிறகு விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும், நான்கு வாரங்களுக்குப் பிறகும் வழக்கு விசாரணைக்கு வராததால், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை தமிழக அரசின் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி ஆஜராகி, முந்தைய விசாரணையின் போது, ‘இந்த வழக்கு நான்கு வாரங்களுக்குப் பிறகு பட்டியலிட உத்தரவிடப்பட்டிருந்தது. வழக்கை விசாரணைக்குப் பட்டியலிடப்பட வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் தீா்ப்பாயம் அமைப்பதற்கான உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட வேண்டியிருக்கிறது’ என்று கூறினாா். இதையடுத்து, ஜனவரி 23-ஆம் தேதி இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.