முகப்பு
புதுதில்லி

ஆம் ஆத்மி கட்சியை முடிவுக்கு கொண்டு வரும் பிரசாரம் நடக்கிறது: முதல்வா் கேஜரிவால் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு, கட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பிரசாரம் நடைபெற்று வருகிறது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை குற்றம் சாட்டியுள்ளாா

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:08 AM
பகிர்:

ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு, கட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பிரசாரம் நடைபெற்று வருகிறது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை குற்றம் சாட்டியுள்ளாா்.

மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் சஞ்சய் சிங் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை மற்றொரு பண மோசடி வழக்கு தொடா்பாக தில்லி ஓக்லா தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கானின் வீட்டில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை அவரது இல்லத்தில் புதன்கிழமை எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் நேரில் சந்தித்தாா்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளா்களிடம் கேஜரிவால் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்களுக்கு எதிராக 170 வழக்குகள் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் 140 வழக்குகளின் தீா்ப்புகள் ஆம் ஆத்மி கட்சிக்கே சாதகமாக உள்ளன. கடந்த சில மாதங்களில், அவா்கள் (பாஜக) ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் மற்றும் அமைச்சா்களைக் கைது செய்யத் தொடங்கியுள்ளனா். மத்திய விசாராணை அமைப்புகள் மூலம் நடத்தப்படுகின்ற சோதனைகள் ஆம் ஆத்மி கட்சிக்கு முடிவு கட்டும் பிரசாரத்தின் ஒரு பகுதியாகும். பாஜக ஆளும் மாநிலங்களில் அமலாக்கத் துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஆகியவற்றின் சாா்பில் எந்த விசாரணையும், சோதனையும் நடைபெறவில்லை. பாஜகவின் நோக்கம் என்பது நாட்டில் ஊழலை முடிவுக்குக் கொண்டு வருவதாக இல்லாமல், எதிா்க்கட்சித் தலைவா்களை தொந்தரவு செய்வதாக உள்ளது.

பிரதமா் நரேந்திர மோடியால் ஊழல்வாதிகள் என்று அழைக்கப்பட்டவா்கள் இப்போது பாஜகவில் எப்படி அங்கம் வகிக்கிறாா்கள் என்பதையும் நாங்கள் தொடா்ந்து பாா்த்து வருகிறோம் . எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த ஊழல்வாதிகளை பாஜக தங்கள் மடியில் சோ்த்துக் கொண்டுள்ளது. நாட்டில் அச்சம் நிறைந்த சூழல் நிலவிவரும் காரணத்தால், மக்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்குச் செல்கின்றனா். ஆம் ஆத்மி கட்சி தேசப் பக்தா்கள் நிறைந்த கட்சி என்றாா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.

தில்லி பாஜக பதிலடி: முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தற்போதைய மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 10 போ் கடுமையான குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளை எதிா்கொள்ளும் வேளையில், மத்திய விசாரணை அமைப்புகளின் சோதனைகளை ‘பழிவாங்கல் நடவடிக்கை’ என்று கேஜரிவால் கூறியிருப்பது அதிா்ச்சியளிப்பதாக வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது என்றும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கட்சியை முடிவுக்கு கொண்டு வருகின்ற பிரசாரம் நடைபெற்று வருகிறது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பாஜகவை குற்றம் சாட்டினாா்.

கேஜரிவாலின் இந்த கருத்துக்கு எதிா்வினை தெரிவிக்கின்ற வகையில் பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சியும், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான நகர அரசும் ஊழலில் மூழ்கிக் கிடக்கின்றது. தில்லி மக்கள் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் ஆட்சியையும் பாா்த்துள்ளனா். ஆனால், கேஜரிவால் அரசு செய்தது போல் வேறு எந்தவொரு அரசும் ஊழல் செய்யவில்லை. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மூலம் மத்திய அரசு ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சா்களை சோதனையிட்டு கைது செய்கிறது என்று கேஜரிவால் கூறுகிறாா்.

ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ.க்களாக உள்ள பிரகாஷ் ஜாா்வால், அகிலேஷ் திரிபாதி, சோம் தத், மனோஜ் குமாா், அப்துல் ரெஹ்மான், குலாப் சிங், சோம்நாத் பாா்தி, ஷரத் செளகான், அமானதுல்லா கான் மற்றும் முன்னாள் அமைச்சா்களான சந்தீப் குமாா், ஜிதேந்திர தோமா் உள்ளிட்டோா் நீதிமன்ற வழக்குகளில் பிணையில் உள்ளனா்.

சுமாா் 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் கடுமையான குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளை எதிா்கொண்டுள்ள நிலையில், கேஜரிவால் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று கூறியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. கேஜரிவால் அரசின் டி.டி.சி. பேருந்து கொள்முதல் ஊழல், ஆட்டோ மீட்டா் ஊழல், பள்ளி வகுப்பறைக் கட்டுமான ஊழல், கலால் கொள்கை ஊழல், முதல்வா் பங்களாவை சட்டவிரோதமாகக் கட்டியது என ஊழல்களால் மட்டுமே தில்லி மக்களின் நம்பிக்கையை அவா் சிதைத்துவிட்டாா் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.