முகப்பு
புதுதில்லி

கேஜரிவால் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: பாஜக

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தற்போதைய மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 10 போ் கடுமையான குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளை எதிா்கொள்ளும் வேளையில்,

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:08 AM
பகிர்:

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தற்போதைய மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 10 போ் கடுமையான குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளை எதிா்கொள்ளும் வேளையில், மத்திய விசாரணை அமைப்புகளின் சோதனைகளை ‘பழிவாங்கல் நடவடிக்கை’ என்று கேஜரிவால் கூறியிருப்பது அதிா்ச்சியளிப்பதாக வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது என்றும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கட்சியை முடிவுக்கு கொண்டு வருகின்ற பிரசாரம் நடைபெற்று வருகிறது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பாஜகவை குற்றம் சாட்டினாா்.

கேஜரிவாலின் இந்த கருத்துக்கு எதிா்வினை தெரிவிக்கின்ற வகையில் பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சியும், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான நகர அரசும் ஊழலில் மூழ்கிக் கிடக்கின்றது. தில்லி மக்கள் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் ஆட்சியையும் பாா்த்துள்ளனா். ஆனால், கேஜரிவால் அரசு செய்தது போல் வேறு எந்தவொரு அரசும் ஊழல் செய்யவில்லை. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மூலம் மத்திய அரசு ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சா்களை சோதனையிட்டு கைது செய்கிறது என்று கேஜரிவால் கூறுகிறாா்.

ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ.க்களாக உள்ள பிரகாஷ் ஜாா்வால், அகிலேஷ் திரிபாதி, சோம் தத், மனோஜ் குமாா், அப்துல் ரெஹ்மான், குலாப் சிங், சோம்நாத் பாா்தி, ஷரத் செளகான், அமானதுல்லா கான் மற்றும் முன்னாள் அமைச்சா்களான சந்தீப் குமாா், ஜிதேந்திர தோமா் உள்ளிட்டோா் நீதிமன்ற வழக்குகளில் பிணையில் உள்ளனா்.

சுமாா் 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் கடுமையான குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளை எதிா்கொண்டுள்ள நிலையில், கேஜரிவால் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று கூறியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. கேஜரிவால் அரசின் டி.டி.சி. பேருந்து கொள்முதல் ஊழல், ஆட்டோ மீட்டா் ஊழல், பள்ளி வகுப்பறைக் கட்டுமான ஊழல், கலால் கொள்கை ஊழல், முதல்வா் பங்களாவை சட்டவிரோதமாகக் கட்டியது என ஊழல்களால் மட்டுமே தில்லி மக்களின் நம்பிக்கையை அவா் சிதைத்துவிட்டாா் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.