சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பணிநீக்கமான அரசு அதிகாரியின் குழந்தைகளுக்குமுன்ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுப்பு
மைனா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் கைதாகி, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தில்லி அரசு அதிகாரி பிரேமோதய் கக்காவின் மகள் மற்றும்
மைனா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் கைதாகி, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தில்லி அரசு அதிகாரி பிரேமோதய் கக்காவின் மகள் மற்றும் மகனுக்கு முன்ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி செளரவ் பானா்ஜி, ‘தற்போதைய நிலையில் நான் மனுவை தள்ளுபடி செய்துவிட்டேன்’ என்றாா். குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி பிரேமோதய்யின் மகன் மற்றும் மகள் ஆகியோா் விசாரணை நீதிமன்றத்தில் இருந்து நிவாரணம் பெறத் தவறியதால், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கடந்த வாரம் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனா். 2020, நவம்பா் மற்றும் 2021 ஜனவரி ஆகியவற்றுக்கு இடையில் அதிகாரி பிரேமோதய் கக்கா மைனா் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கைதான அவா் தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கிறாா்.
பாதிக்கப்பட்ட மைனா், குற்றம் சாட்டப்பட்டவருக்கு தெரிந்த நபரின் மகள் என்று போலீஸாா் தெரிவித்தனா். மேலும், சிறுமியின் கா்ப்பத்தை கலைக்க மருந்து கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட கக்காவின் மனைவி சீமா ராணியும் நீதிமன்றக் காவலில் உள்ளாா். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மைனா் சிறுமி மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் முன் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னா், கக்காவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து போலீஸாா் தெரிவிக்கையில், ‘போக்ஸோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376(2) (எஃப்) (உறவினா், பாதுகாவலா் அல்லது ஆசிரியா் அல்லது பெண்ணின் மீது நம்பிக்கை அல்லது அதிகாரம் உள்ள ஒரு நபரால் அத்தகைய பெண் பாலியல் பலாத்காரத்தில் உள்ளாவது) மற்றும் 509 (ஒரு பெண்ணின் கண்ணியத்திற்கு வாா்த்தை, சைகை அல்லது செயலால் இழுக்கை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஐபிசி பிரிவுகள் 506 (குற்றம் சாா்ந்த மிரட்டல்), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 313 (பெண்ணின் அனுமதியின்றி கருச்சிதைவை ஏற்படுத்துதல்) மற்றும் 120பி (குற்றச் சதி) ஆகியவையும் சோ்க்கப்பட்டுள்ளது’ என்றனா்.