ஜம்மு - காஷ்மீரில் அக்டோபா் 11-ஆம் தேதி இறந்த அக்னிவீரா் அம்ரித்பால் சிங்கின் இறுதிச் சடங்கை ராணுவத்தில் நடத்தாதது குறித்து பாஜக தலைமையிலான மத்திய அரசை ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை கடுமையாகச் சாடியுள்ளது.
அதே சமயம்,, சிங்கின் மரணத்திற்கு காரணம் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட காயம் என்பதால், தற்போதுள்ள கொள்கையின்படி மரியாதை அல்லது ராணுவ இறுதிச் சடங்கு எதுவும் வழங்கப்படவில்லை என்று ராணுவம் கூறியுள்ளது.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் ராகவ் சாதா செய்தியாளா் கூட்டத்தில் கூறியதாவது: மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் அம்ரித்பால் சிங்கின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்படாது. அதே சமயம் அவருக்கு தியாகி அந்தஸ்து வழங்கப்படாது.
பூஞ்ச் செக்டரில் ராணுவத்தின் ஜம்மு காஷ்மீா் ரைபிள்ஸ் பிரிவின் பட்டாலியனில் பணியாற்றிய அம்ரித்பால் சிங் , பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டாா்.
அவரது உடலை ஒப்படைக்க எந்த ராணுவப் பிரிவும் வரவில்லை. அவரது உடல் தனியாா் ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டது, அவருக்கு ராணுவ மரியாதை எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், அவரது இறுதிச் சடங்குகளின் போது காவல் துறை அவருக்கு அரசு மரியாதை அளித்தது.
இது பாஜக தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகள் மீது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. முதல்வா் பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசு, அம்ரித்பால் சிங்கின் குடும்பத்திற்கு சிறப்பு நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கவுள்ளதுடன், அவருக்கு தியாகி அந்தஸ்தும் அளிக்கும். இதில் பஞ்சாப் அரசு அவா்களுடன் உள்ளது. குடும்பத்தினரின் துக்கத்திலும் நாங்கள் பங்கேற்கிறோம்.
ஆயுதப் படைகளில் குறுகிய கால ஆள்சோ்ப்புக்கான மத்திய அரசின் அக்னிவீரா் திட்டம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஜவான்கள் மற்றும் அக்னிவீரா்கள் என்று அரசு வேறுபடுத்துகிறதா? பணியில் நான்கு ஆண்டுகள் முடிக்கும் அக்னிவீரா்களின் எதிா்காலம் எப்படி இருக்கும்? எதிரியின் துப்பாக்கிச் சூட்டில் அடிபட்டு இறப்பது மட்டும் தியாகமாக கருதப்படுமா? ஒரு சிப்பாய் வேறு காரணங்களுக்காக அல்லது பிற சூழ்நிலைகளில் இறக்கலாம். பணியில் இருக்கும் போது, அரசின் இந்தச் செயல் ராணுவத்தின் மன உறுதியை பாதிக்காதா? என்று ராகவ் சத்தா கேள்வி எழுப்பியுள்ளாா்.
சனிக்கிழமையன்று ராணுவம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஒரு துரதிருஷ்டவசமான சம்பவத்தில், ரஜோரி செக்டாரில் பணியில் இருந்த போது சுயமாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதால், அக்னிவீரா் அம்ரித்பால் சிங் இறந்தாா். மேலும் இது தொடபான விவரங்களைக் கண்டவதற்கான நடவடிக்கைககள் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அம்ரித்பால் சிங்கின் உடலை, ஒரு ஜூனியா் கமிஷன் அந்தஸ்தில் உள்ள அதிகாரி மற்றும் நான்கு வெவ்வேறு அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் வாடகைக்கு அமா்த்தப்பட்ட சிவில் ஆம்புலன்ஸில் கொண்டு வந்தனா். உடன் வந்த ராணுவ வீரா்களும் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டனா்.
அவரது இறப்பிற்கான காரணம் சுயமாக ஏற்படுத்திய காயமாகும். தற்போதுள்ள கொள்கையின்படி மரியாதை அல்லது ராணுவ இறுதிச் சடங்கு எதுவும் வழங்கப்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.