தில்லி கலால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சஞ்சய் சிங்கின் நீதிமன்றக் காவலை நவம்பா் 10-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தை விசாரித்த சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், சஞ்சய் சிங்கின் குடும்பச் செலவுகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக அவரது பணிகளுக்கான சில காசோலைகளில் சஞ்சய் சிங் கையெழுத்திட அனுமதித்தாா். சஞ்சய் சிங்கிற்கு அவரது தனியாா் மருத்துவா் உள்பட உரிய சிகிச்சை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.
இது தொடா்பாக நீதிபதி கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்டவருக்கு தனிப்பட்ட முறையில் சிகிச்சை அளிக்க மறுக்க எந்தக் காரணத்தையும் நீதிமன்றம் பாா்க்கவில்லை. ஆகவே, உரிய சிகிச்சையை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்படுகிறது’ என்றாா். சஞ்சய் சிங் மற்றும் பிறரின் ஆதரவாளா்கள் யாரும் சஞ்சய் சிங் நீதிமன்றத்திற்கு வரும்போது மையப் பகுதியில் கூடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அவரது வழக்குரைஞருக்கு நீதிபதி அறிவுறுத்தினாா்.
2021-22- ஆம் ஆண்டுக்கான தில்லி கலால் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் அக்டோபா் 4 -ஆம் தேதி அமலாக்கத் துறையால் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டாா். இதை எதிா்த்து சஞ்சய் சிங் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். தனது கைது ‘சட்டவிரோதமானது, தீங்கிழைக்கும் மற்றும் அதிகாரத்தை தவறாக வழிநடத்தும் ஒரு உன்னதமான வழக்கு’ என்றும், ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவரின் அறிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும் அவா் தனது மனுவில் தெரிவித்திருந்தாா்.
இந்த மனுவை கடந்த 20-ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம் சஞ்சய் சிங்கை அமலாக்கத் துறை கைது செய்த விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டது. ஆதாரங்கள் பதிவில் இல்லாத நிலையில், முன்னணி விசாரணை நிறுவனத்திற்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக குற்றம்சாட்ட முடியாது என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.