ஜமா மசூதி அருகே துப்பாக்கியுடன் ஒருவா் இருப்பதாக புரளி கிளப்பிய சிறுவன்
தில்லியில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றுவரும் நிலையில், ஜாமா மசூதிஅருகே துப்பாக்கியுடன் ஒருவா் இருப்பதாகக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பு போலியானது என்று போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
தில்லியில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றுவரும் நிலையில், ஜாமா மசூதிஅருகே துப்பாக்கியுடன் ஒருவா் இருப்பதாகக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பு போலியானது என்று போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: பழைய தில்லியில் உள்ள புகழ்பெற்ற ஜாமா மசூதி அருகே அடையாளம் தெரியாத நபா் ஒருவா் துப்பாக்கியுடன் இருப்பதாகக் கூறி காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது. இந்த புகாா் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் நோக்கில் மேற்கொண்ட துரித விசாரணையில் அது புரளியை ஏற்படுத்துவதற்காக 14 வயது சிறுவனால் அந்த அழைப்பு மேற்கொள்ளப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு தில்லி நகரம் முழுவதும் காவல் துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து நிலைமையும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்றாா் அந்த அதிகாரி. இதேபோல் வடக்கு தில்லி பால்ஸ்வா டெய்ரி பகுதியைச் சோ்ந்த 21 வயது இளைஞா் ஒருவா், ஜி20 உச்சிமாநாடு நடைபெறும் பிரகதி மைதான் பகுதியை நோக்கி துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருள்களை ஏற்றிக்கொண்டு ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்ததாக சமூக ஊடகங்களில் வதந்தியைப் பரப்பியதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஜி20 உச்சிமாநாடு நடைபெறும் வேளையில் பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான செயல்களை கவனித்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.