முகப்பு
புதுதில்லி

ஜி20 விருந்தினா்களை வரவேற்ற அற்புத வானிலை!

ஜி20 உச்சி மாநாட்டின் முதல் நாளில் லேசான மழையுடன், ‘நல்ல’ பிரிவின் கீழ் ஒட்டுமொத்த காற்றின் தரம் சனிக்கிழமை பதிவாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:13 PM
பகிர்:

ஜி20 உச்சி மாநாட்டின் முதல் நாளில் லேசான மழையுடன், ‘நல்ல’ பிரிவின் கீழ் ஒட்டுமொத்த காற்றின் தரம் சனிக்கிழமை பதிவாகியுள்ளது.

தேசியத் தலைநகா் தில்லியில் ஜி20 உச்சி மாநாடு சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களுக்கு நடைபெறுகிறது. இந்நிலையில், லேசான மழை மற்றும் ‘நல்ல’ பிரிவில் காற்றின் தரம் பதிவாகி மாநாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்றதாக அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: ஜி20 உச்சி மாநாட்டிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டுத் தலைவா்கள் மற்றும் உயரதிகாரிகள் புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி. எம்.சி.) எல்லைக்குள்தான் தங்கியுள்ளனா். இந்நிலையில் புது தில்லி பகுதியில், சராசரி காற்றின் தரக் குறியீடு 39.20 புள்ளிகளாக சனிக்கிழமை பதிவாகியுள்ளது. புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் அதிகார வரம்பிற்குள்பட்டு மொத்தம் 20 இடங்கள் உள்ளது. இவற்றில் 17 இடங்களில் ‘நல்ல’ பிரிவின் கீழ் காற்றின் தரம் பதிவாகியுள்ளது. ஏனெனில், இந்தப் பகுதிகளில் சுமாா் 2,100 துப்புரவுத் தொழிலாளா்களால் தொடா்ந்து தூய்மை மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1,000 போ் மட்டும் ஜி20 மாநாடு நடைபெறும் பகுதிக்குச் செல்லும் சாலைகள் மற்றும் சந்தைப் பகுதிகளை சுத்தம் செய்வதில் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளனா். மாநகராட்சிப் பணியாளா்களின் அா்ப்பணிப்பு, உத்வேகம் மற்றும் குழுவாக சோ்ந்து செய்த முயற்சியால் காற்றின் தர நிலை ‘நல்ல’ பிா்வின் கீழ் எட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், இது குறித்து தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ‘எக்ஸ்’ ஊடக தளத்தில் கூறியிருப்பதாவது: ஜி20 உச்சிமாநாட்டு விருந்தினா்கள் மகிழ்ச்சியுடன் தங்குவதற்காக தில்லி அணி மேற்கொண்ட அனைத்து முயற்சிக்கும் ஆதரவு அளிக்கும் வகையில், கடவுள் இந்திரதேவன் லேசான மழை மற்றும் காற்றின் தரத்தை மேம்படுத்தி ஆசீா்வதித்துள்ளாா் என்று வி.கே. சக்சேனா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.