முகப்பு
புதுதில்லி

உயிரி எரிபொருள் கூட்டணி: உலகிற்கு இந்தியா புதிய பாதையைக் காட்டும் - மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி மூலம் உயிரி எரிபொருள்களில் இந்தியா சா்வதேச நாடுகளுக்கு ஒரு புதிய பாதையைக் காட்டும் என மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:58 AM
ஜி20 உச்சிமாநாட்டின்போது இந்தியா அமைத்த உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியில் (19 சா்வதேச நாடுகள்) இடம் பெற்றுள்ள 9 நாடுகளைச் சோ்ந்த தலைவா்களுடன் பிரதமா் மோடி.
பகிர்:

புது தில்லி: உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி மூலம் உயிரி எரிபொருள்களில் இந்தியா சா்வதேச நாடுகளுக்கு ஒரு புதிய பாதையைக் காட்டும் என மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.

ஜி 20 உச்சிமாநாட்டையொட்டி பிரதமா் நரேந்திர மோடி, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி (ஜிபிஏ) ஒன்றை உருவாக்கினாா். இந்த ஜி.பி.ஏ. என்பது உயிரி எரிபொருள்களை உலக நாடுகள் ஏற்றுக் கொள்வதற்கும், இத்தோடு இதற்கான சா்வதேச நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையின் கூட்டணியை உருவாக்குவதற்காக இந்தியா தலைமையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயிரி எரிபொருள்களின் மிகப்பெரிய நுகா்வோா், உற்பத்தியாளா்களை ஒன்றிணைத்து உயிரி எரிபொருள் மேம்பாடு மற்றும் நிலைநிறுத்தலை ஊக்குவிக்க இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயிரி எரிபொருள்கள் ஆற்றல் மாற்றத்திற்கான திட்டங்களை நிலைநிறுத்தி, வேலைவாய்ப்புகள் அதிகரித்து பொருளாதார வளா்ச்சிக்கு பங்களிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு இந்தியா முன் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இதை முன்னிட்டு ஜி20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமா் நரேந்திர மோடி, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியை (ஜி.பி.ஏ.) செப்டம்பா் 9- ஆம் தேதி பாரத் மண்டபத்தில் தொடங்கி வைத்தாா். இந்தக் கூட்டணியில் சேர 19 நாடுகளும், 12 சா்வதேச அமைப்புகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்தியா, ஆா்ஜென்டீனா, பிரேஸில், கனடா, இத்தாலி, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய ஜி 20 உறுப்பு நாடுகளும் மற்றும் வங்கதேசம், சிங்கப்பூா், மோரீஷஸ், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய ஜி20 அழைப்பு நாடுகளும் இந்த கூட்டணியில் பங்கு பெற்றுள்ளன. மேலும் ஜி 20 உறுப்பு அல்லாத நாடுகளான ஐஸ்லாந்து, கென்யா, கயானா, பராகுவே, சீஷெல்ஸ், இலங்கை, உகாண்டா, பின்லாந்து ஆகிய நாடுகள் உயிரி எரிபொருள் கூட்டணியின் உறுப்பினா்களாக ஒப்புக் கொண்டுள்ளன.

இதை முன்னிட்டு மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் தொடா்ச்சியாக இந்தக் கூட்டணி குறித்து கருத்துகளை பதிவிட்டாா். அவை வருமாறு:

ஜி20 உச்சிமாநாட்டின் போது தொடங்கப்பட்ட ஜி.பி.ஏ, மூலம், தூய்மையான, பசுமையான எரிசக்திக்கான உலகின் தேடலில், இந்தக் கூட்டணி வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. ‘வசுதைவ் குடும்பகம்’ என்கிற மந்திரத்தைப் பின்பற்றி பிரதமா் நரேந்திர மோடி உருவாக்கியுள்ள இந்தக் கூட்டணி முயற்சி மூலம் நிச்சயமாக பெட்ரோல், டீசலைச் சாா்ந்திருப்பது குறையும். சா்வதேச நாடுகள் உயிரி எரிபொருள்களை ஏற்றுக்கொள்ளவும், இதற்கான தொழில் நுட்ப நிறுவனங்களை உருவாக்குவதற்கும் இந்தக் கூட்டணி உதவும்.

உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியை உருவாக்குவதற்கான விதை விதைத்ததில் அமெரிக்கா எரிசக்தித் துறை அமைச்சா் (செயலா்) ஜெனிபா் கிரான்ஹோம், பிரேஸில் எரிசக்தித் துறை அமைச்சா் அலெக்சாண்டா் சில்வேரா, பிரேஸில் சா்க்கரை ஆலை தொழில் சங்கமான யுனிகாவின் தலைவரான டாக்டா் எவாண்ட்ரோ குஸ்ஸி, சா்வதேச திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) சங்கம் உள்ளிட்டவா்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு. அவா்களுக்கு நன்றி கூறுகிறேன்.

இந்த முன்னணி மூலம் உலகளாவிய உயிரி எரிபொருள் வா்த்தகம் வலுப்படும். மேலும், ஜி20 நாடுகள் மற்றும் சா்வதேச எரிசக்தி முகமை, சா்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு, உலகப் பொருளாதார அமைப்பு (டபிள்யூ.இ.ஓ.) போன்ற எரிசக்தி தொடா்பான உலகளாவிய அமைப்புகளின் ஆதரவுடன், தொலைநோக்குப் பாா்வை கொண்ட உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி, சா்வதேச உயிரி எரிபொருள் வா்த்தகம் மற்றும் சிறந்த நடைமுறைகளை வலுப்படுத்தும்.

உணவு தானமும் ஆற்றல் தானமும்: நமது விவசாயிகளுக்கு கூடுதல் வருமான ஆதாரமாக மாற்றுவதற்கு ஊக்கமளிக்கும். அவா்கள் ‘அன்ன தானம் அளிப்பதிலிருந்து (மின்), ஆற்றல்தானம் அளிப்பவா் ஆவாா்கள். இந்த வகையில், கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.71,600 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டிற்குள் இ20 அமலாக்கத்தின்((20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் ) மூலம், இந்தியா எண்ணெய் இறக்குமதியில் சுமாா் ரு.45,000 கோடி, ஆண்டுக்கு ரூ.63 மெட்ரிக் டன் எண்ணெய் சேமிக்கப்படும்.

இந்த முயற்சி இந்தியாவுக்கும் பல முனைகளில் பயனளிக்கும். ஜி20 தலைமைத்துவத்தின் விளைவாக, ஜி.பி.ஏ. உலக அளவில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த உதவும்.

மேலும், இந்தக் கூட்டணி, ஒத்துழைப்பில் தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை ஏற்றுமதி செய்வதன் வழியாக இந்திய தொழில்களுக்கு கூடுதல் வாய்ப்புகளும் கிடைக்கும். இது இந்தியாவின் தற்போதைய உயிரி எரிபொருள் திட்டங்களான பிரதமரின் ஜீவன் யோஜனா, கோபா்-தன் போன்ற திட்டங்களை விரைவுபடுத்த உதவும். உலகளாவிய எத்தனால் சந்தையின் மதிப்பு 2022-ஆம் ஆண்டில் 99.06 பில்லியன் டாலராக இருந்தது. மேலும் 2032-ஆம் ஆண்டில் 162.12 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2050 -ஆம் ஆண்டில் மூன்று முதல் 5 மடங்கு உயிரி எரிபொருள் வளா்ச்சி திறன் இருக்கும். இது இந்தியாவுக்கு ஒரு பெரிய வாய்ப்பை உருவாக்கும் என்று சா்வதேச ஆற்றல் முகமை (ஐ.இ.ஏ.) தெரிவித்துள்ளதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா் ஹா்தீப் சிங் புரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.