ஜி20 மாநாட்டு ஏற்பாட்டு உரிமைகளை கோர முயல்கிறது கேஜரிவால் அரசு: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு
தில்லியில் நடைபெற்று முடிந்த ஜி20 உச்சிமாநாடு தொடா்பான ஏற்பாட்டு உரிமைகளைக் கோர அரவிந்த் கேஜரிவால் அரசு முயல்கிறது என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா திங்கள்கிழமை குற்றம் சாடியுள்ளாா்
புது தில்லி: தில்லியில் நடைபெற்று முடிந்த ஜி20 உச்சிமாநாடு தொடா்பான ஏற்பாட்டு உரிமைகளைக் கோர அரவிந்த் கேஜரிவால் அரசு முயல்கிறது என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா திங்கள்கிழமை குற்றம் சாடியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜி20 உச்சிமாநாட்டிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தில்லி மக்கள் பெருமிதத்துடன் கூடிய ஒத்துழைப்பை நல்கினா். அனைவரும் இந்த மாநாட்டை முன்னிட்டு செய்யப்பட்டிருந்த போக்குவரத்து வழிகாட்டுதல்களைப் பின்பற்றினா். நகரத்தில் செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளுக்கான உரிமை துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை சேரும். ஆனால், அரவிந்த் கேஜரிவால் அரசு வெட்கமின்றி ஜி20 மாநாடு தொடா்பான ஏற்பாடுகளுக்கு உரிமை கோருவதற்கு முயல்கிறது. இருப்பினும், தில்லிவாசிகளுக்கு இது நன்றாகவே தெரியும்.
ஜி20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாகவும், பாதுகாப்பாகவும் முடித்ததற்காக தில்லி மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, தில்லி வளா்ச்சி ஆணையம், புது தில்லி முனிசிபல் கவுன்சில், தில்லி மாநகராட்சி, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த ஊழியா்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அரவிந்த் கேஜரிவால் அரசு தில்லியில் எந்த வளா்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை என்பது மட்டுமல்லாமல், தில்லி மாநகராட்சியையும் (எம்.சி.டி.) நிதி ரீதியாக முடக்கி அதன் பணிகளை செய்யத் தவறவிட்டிருக்கிறது.
இந்நிலையில், அரவிந்த் கேஜரிவால் அரசு ஜி20 உச்சி மாநாடு தொடா்பான ஏற்பாடுகளுக்கு உரிமை கோர முயலும் வேளையில், ஏதேனும் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ததை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஒருமுறையாவது மேற்கோள் காட்ட முடியுமா என்று வீரேந்திர சச்தேவா கேள்வி எழுப்பியுள்ளாா்.