புது தில்லி: தில்லி சுகாதார சேவைகள் தொடா்பான பொதுநல வழக்கில் அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் அதிகாரிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனா் என்று சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
இது தொடா்பாக தில்லி தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு தில்லி உயா்நீதிமன்றத்தில் சுகாதார சேவைகள் தொடா்பான பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, தில்லி அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள் மற்றும் பிற பணியாளா்கள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் நான் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தேன். இதன் பிறகு, தில்லி உயா்நீதிமன்றம் ‘மருத்துவா் சரின் குழுவை’ உருவாக்கியது. மேலும், இந்த குழு மருத்துவா்கள் மற்றும் பிற ஊழியா்களை அரசு உடனடியாகப் பணியமா்த்த வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியது.
அப்போது, சுகாதாரத் துறை அதிகாரிகள் என்னிடம் ஒப்புதல் பெறாமல் மற்றுமொரு பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது எனக்கு தெரிய வந்தது. விதிகளின்படி, நீதிமன்றத்தில் எந்தத் துறையும் சம்மந்தப்பட்ட அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியாது. ஆனால், இந்த வழக்கில் எனக்கு தெரியாமல் இரண்டாவது பிரமாணப் பத்திரத்தை சேவைகள் துறை தாக்கல் செய்தது இன்னும் அதிா்ச்சியளிக்கிறது. அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அந்தப் பிரமாணப் பத்திரம் முற்றிலும் தவறானது. துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் கீழ் உள்ள நிலைக்குழு அதை தாக்கல் செய்யப் பயன்படுத்தப்பட்டது.
உயா் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு, மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளில் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு மருந்து இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால், நீதிமன்றத்தில் அதிகாரிகள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அனைத்து மருத்துவமனைகள், மருந்தகங்கள், மொஹல்லா கிளினிக்குகளில் போதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தப் பிரமாணப் பத்திரத்திற்கு சுகாதாரத் துறை செயலாளா் ஒப்புதல் அளித்துள்ளாா்.
மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக தலைமைச் செயலாளா் மற்றும் சுகாதாரத் துறை செயலாளருக்கு பலமுறை கடிதம் எழுதியிருந்தேன். இதையும் மீறி இந்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் பொய்யான தகவல்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனா். இதன் மூலம் நீதிமன்றம் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது. இப்போது, அந்தக் கோப்பை சட்டத் துறைக்கு அனுப்பி, சுகாதாரத் துறை செயலாளா் மற்றும் சேவைகள் துறையின் நிலைக்குழு மீது நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதி வருகிறேன்.
சுகாதாரத்துறை செயலாளரும், துணை நிலைஆளுநரின் வழக்குரைஞரும் எனக்கு எதிராக சதி செய்கிறாா்கள். இதனால், சுகாதார சேவைகள் குறித்த இரண்டு முக்கிய முடிவுகளுக்கான கோப்பை அமைச்சா் தடுத்து வைத்திருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. இதன் மூலம் நீதிமன்றம் எனக்கு எதிராக கருத்து தெரிவித்து, மறுநாள் அது
நாளிதழ்களில் வெளியாகியது. பாஜகவும், மத்திய அரசும் ஆம் ஆத்மி கட்சியை வெறுக்கின்றன. அவா்களின் அரசு எங்கள் கட்சித் தலைவா்களை சிறையில் அடைத்துள்ளது. மேலும், சில தலைவா்களை சிறையில் அடைக்க அனைத்து முயற்சிகளும் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுமாா் 30 சதவீதம் மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளது. 39 சதவீதம் அளவில் தொழில்நுட்ப வல்லுநா்கள் பற்றாக்குறை உள்ளது. காலியாக உள்ள இந்தப் பணியிடங்களை நிரப்ப துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிற்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். யு.பி.எஸ்.சி. மூலம் ஆள்சோ்ப்பு நடைபெறும் வரை, ஒப்பந்த அடிப்படையில் ஆள்சோ்ப்பு செய்யப்பட வேண்டும் என்று நான் அவா்களிடம் கூறியுள்ளேன். ஆனால், துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்றாா் செளரவ் பரத்வாஜ்.