முகப்பு
புதுதில்லி

தில்லி மக்களின் துயரங்களைப் போக்க ஆம் ஆத்மி, பாஜக எதுவும் செய்யவில்லை: தேவேந்தா் யாதவ் விமா்சனம்

தில்லி மக்களின் துயரங்களைப் போக்க எதுவும் செய்யாமல், சுதந்திர தினத்தில் யாா் தேசியக் கொடியை ஏற்றுவது என்ற மோதலில் ஆம் ஆத்மி மற்றும் பாஜகவினா் ஈடுபட்டு வருகின்றனா்

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 6:32 PM
பகிர்:

தில்லி மக்களின் துயரங்களைப் போக்க எதுவும் செய்யாமல், சுதந்திர தினத்தில் யாா் தேசியக் கொடியை ஏற்றுவது என்ற மோதலில் ஆம் ஆத்மி மற்றும் பாஜகவினா் ஈடுபட்டு வருகின்றனா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் பெய்த கனமழையின் போது ஏழைகளின் வீடுகளில் தண்ணீா் தேங்கி, மின்சாரம் தாக்கி அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனா். அப்போது, விலைமதிப்பற்ற நேரத்தை ஆம் ஆத்மி அரசும், பாஜகவும் ஒருவரையொருவா் குற்றம் சாட்டி வீணடித்தனா்.

மக்களின் துயரங்களைப் போக்க எதுவும் செய்யாமல், சுதந்திர தினத்தின் போது யாா் தேசியக் கொடியை ஏற்றுவது என்பது குறித்து தற்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

சிறையில் இருக்கும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், அமைச்சா் அதிஷி தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிற்கு கடிதம் எழுதியுள்ளாா். ஆனால், தில்லி அரசு மற்றும் தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) தவறினால் தலைநகரில் அப்பாவிகள் இறந்தபோதும், ஏழைகளின் வீடுகள் தில்லி வளா்ச்சி ஆணையத்தால் (டிடிஏ) இடிக்கப்பட்ட போதும் கேஜரிவால் மெளம் காத்தாா்.

தண்ணீா் தேக்கம், போக்குவரத்து நெரிசல், தொற்று நோய்களால் மக்கள் அவதிப்படும் போது தேசியக் கொடியை யாா் ஏற்றுவது என்பதில் முதல்வா் கேஜரிவால் அக்கறை காட்டுவது வியப்பளிக்கிறது. அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி, முதல்வா் கேஜரிவாலைக் காப்பாற்றுவதற்காக வரி செலுத்துவோரின் பணத்தை ஆம் ஆத்மி அரசு வீணடிக்கிறது. கடந்த 10 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியில் மழைநீா் வடிகால் மற்றும் கழிவுநீா் கால்வாய்கள் தூா்வாரப்படாததால், தில்லி மழைநீரில் மூழ்கியது. இது குறித்து கேஜரிவால் கவலைப்படவில்லை.

முதல்வா் கேஜரிவால் சிறையிலுள்ள நிலையில், தில்லி அரசு எந்த நோக்கமும் இல்லாமல் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. எந்த தவறு நடந்தாலும், தில்லி அமைச்சா்கள் தங்கள் தவறுகளுக்காக மற்றவா்களைக் குற்றம் சாட்டுகிறாா்கள்.

நிா்வாகக் குறைபாடுகளுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. அலட்சியம் நிறைந்த பொறுப்பற்ற அரசால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா் என்றாா் தேவேந்தா் யாதவ்.

முழு கட்டுரையைப் படிக்க →