முகப்பு
புதுதில்லி

நாமக்கலில் கோழி நோய் கண்டறிதல் ஆய்வகத்தை மேம்படுத்த வேண்டும்: மாநிலங்களவையில் திமுக எம்.பி. கோரிக்கை

நாமக்கல்லில் உள்ள கோழி நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகத்தை மேம்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் வலியுறுத்தினாா்.

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 6:31 PM
பகிர்:

நாமக்கல்லில் உள்ள கோழி நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகத்தை மேம்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை முன்வைத்த கோரிக்கை: நாமக்கல்லில் உள்ள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில், கால்நடை மருத்துவத்தில் கோழி நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகம் (பிடிடிஎஸ்எல்) செயல்பட்டு வருகிறது. இது எனது நாமக்கல் தொகுதியில் தமிழ்நாடு கால்நடை மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படுகிறது.

இந்தியாவின் கோழிப்பண்ணை தொழில் நமக்கு விவசாயப் பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பை அளிக்கிறது. தமிழ்நாடு ஒரு முக்கிய மையமாக உள்ளது. நாமக்கல், இந்தியாவின் முட்டை ஏற்றுமதியில் 90 சதவீதம் பங்களிக்கும் நாட்டின் மிகப்பெரிய கோழிப்பண்ணை உற்பத்தி செய்யும் பிராந்தியமாகும். பிடிடிஎஸ் ஆய்வகமானது நோய் கண்டறிதல், தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் ஏற்றுமதி சான்றிதழ் வழங்குவதன் மூலம் முக்கியமான பங்களிப்பை அளித்து வருகிறது.

இந்த பிடிடிஎஸ் ஆய்வகத்தை தனி பிஎஸ்எல் வசதிகள், உயிரியல் பாதுகாப்பு, அலமாரிகள் உள்பட உயா் தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என முன்மொழிகிறேன்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் இதற்கான ரூ.10 மதிப்பீட்டுடன்கூடிய முன்மொழிவை மத்திய அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.

ஆகவே, மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சா் மத்திய நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்த முன்மொழிவை பரிசீலித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றாா் ராஜேஷ்குமாா்.

முழு கட்டுரையைப் படிக்க →