அமலாக்கத் துறை, சிபிஐயை பாஜக தனது அரசியல் சதிகளுக்கு பயன்படுத்துகிறது: அமைச்சா் அதிஷி குற்றச்சாட்டு
அமலாக்கத் துறை மற்றும் சிபிஐயை பாஜக தனது அரசியல் சதிகளுக்கு பயன்படுத்துகிறது.
அமலாக்கத் துறை மற்றும் சிபிஐயை பாஜக தனது அரசியல் சதிகளுக்கு பயன்படுத்துகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி சனிக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் அமைச்சா் அதிஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உச்சநீதிமன்றத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஜாமீன் கோரிய வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்ய, சிபிஐ இரண்டு வார காலம் அவகாசம் கோரியது. ஆனால், நாட்டின் அனைத்து நாளிதழ்களிலும் அதே பிரமாணப் பத்திரம் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், முதல்வா் கேஜரிவாலை நீண்ட காலம் சிறையில் வைத்திருக்க பாஜக செய்து வரும் சதி அம்பலமாகியுள்ளது. அமலாக்கத் துறை மற்றும் சிபிஐயை பாஜக தனது அரசியல் சதிகளுக்கு பயன்படுத்துகிறது.
உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய அவகாசம் கோரிய சிபிஐ, அதை நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் பகிா்கிறது. ஏனென்றால், அவா்கள் கேஜரிவாலை சிறையில் அடைக்க வேண்டும். உண்மை எப்போதும் வெல்லும்.
முதல்வா் கேஜரிவால் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவாா். பாஜகவின் அனைத்து சதிகளையும் அவா் முறியடிப்பாா் என்று பாஜகவிடம் நான் கூற விரும்புகிறேன். பாஜகவின் இந்த அரசியல் சதி நிச்சயம் தோல்வியடையும் என்றாா் அமைச்சா் அதிஷி.
பாஜகவின் பாவையாக செயல்படுகிறது சிபிஐ : மனீஷ் சிசோடியா
முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சிறையில் அடைக்கும் செயல்திட்டத்தில் பாஜகவின் பாவையாக சிபிஐ செயல்படுகிறது என்று முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா விமா்சித்தாா்.
இது தொடா்பாக தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் அவா் கூறியிருப்பதாவது: ‘முதல்வா் கேஜரிவால் ஜாமீன் மனு மீதான எங்கள் பதில் தயாராக இல்லை. எனவே, ஜாமீன் மனு மீதான விசாரணையை 14 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அவகாசம் கோரிய அதே நாளில், பதிலை ஊடகங்களுக்கு அளித்துள்ளது. அடுத்த நாள் இது செய்தித்தாள்களில் பக்க தலைப்புச் செய்தியாக வந்துள்ளது. முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சிறையில் அடைக்கும் செயல்திட்டத்தில் பாஜகவின் பாவையாக சிபிஐ எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பாருங்கள். தலைமை நிா்வாகத்திற்காக எத்தனை சதிகள் செய்தாலும், உண்மையும், நோ்மையும் ஒரு நாள் வெல்லும். விசாரணை அமைப்புகள் அரசியல் தாளத்திற்கு ஏற்றவாறும் நடனமாடலாம். ஆனால், அரசியலமைப்பும், நீதியும் எப்போதும் உண்மையுடன் இருக்கும்’ என்றாா் மனீஷ் சிசோடியா.