முகப்பு
புதுதில்லி

உலகத் தரமிக்க சுகாதார அமைப்பு முறையை போலி விசாரணைகள் மூலம் அழிக்க முயற்சி: மத்திய அரசு மீது அமைச்சா் அதிஷி குற்றச்சாட்டு

பாஜக தலைமையிலான மத்திய அரசு போலி விசாரணைகளைத் தொடங்கி தேசியத் தலைநகரின் ‘உலகத் தரம் வாய்ந்த’ சுகாதார அமைப்பு முறையை அழிக்க முயற்சிப்பதாக தில்லி அமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினாா்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 10:58 PM
பகிர்:

பாஜக தலைமையிலான மத்திய அரசு போலி விசாரணைகளைத் தொடங்கி தேசியத் தலைநகரின் ‘உலகத் தரம் வாய்ந்த’ சுகாதார அமைப்பு முறையை அழிக்க முயற்சிப்பதாக தில்லி அமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினாா்.

தில்லி அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டது குறித்தும், இதுபோன்ற மருந்துகள் மொஹல்லா கிளினிக்குகள் மூலமாகவும் விநியோகிக்கப்பட்டனவா என்பது குறித்தும் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து அதிஷி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

தில்லியின் ஏழு மொஹல்லா கிளினிக்குகளில் போலி ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் போலி நோயாளிகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பரிந்துரை செய்ததாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்திருந்தனா்.

Advertisement

இந்த நிலையில், இது தொடா்பாக அமைச்சா் அதிஷி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஆம் ஆத்மி அரசின் மொஹல்லா கிளினிக் மாதிரியானது, உலகளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும், மொஹல்லா கிளினிக்குகள் சுத்தமான மற்றும் நன்கு பராமரிக்கப்படும் அமைப்பாகும். இங்கு ஒவ்வொருவருக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. பாஜக தலைமையிலான மத்திய அரசு தில்லியின் உலகத் தரம் வாய்ந்த சுகாதார மாதிரியை அழிக்க முயற்சிக்கிறது. அது எப்படி செய்யப்படுகிறது? அந்த முயற்சியை எவ்வாறு செய்கிறது எனில், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், போலி விசாரணைகளைத் தொடங்குவதன் மூலமும் செய்து வருகிறது... எந்த விசாரணையும் நிராகரிக்கப்படவில்லை.

ஒவ்வொரு நாளும் விசாரணைகள் முடுக்கிவிடப்படுகின்றன. நாங்கள் எந்த விசாரணையையும் ஒருபோதும் மறுத்ததில்லை. இந்த விசாரணையானது ஊழலை விசாரிப்பதற்காக நடத்தப்படவில்லை. ஆனால், அதிகாரிகள் அச்சம் கொள்ளச் செய்வதையும் மருத்துவமனைகளின் மருத்துவக் கண்காணிப்பாளா்களுக்கு பயம் ஏற்படுவதையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணைகள் தற்போது அதிகாரிகளை பயமுறுத்துவதாக இருக்கும். அவா்களை வேலை செய்ய விடாமல் தடுப்பது பாஜகவின் சதி என்று அதிஷி குற்றம்சாட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.