குற்றவாளிகளின் தண்டனை ரத்து கோரும் மனு மீது முடிவெடுப்பதில் தாமதம்: தில்லி அரசு மீது உச்சநீதிமன்றம் சாடல்
நாட்டுக்கு எதிராகப் போரிட சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜெய்ஷ் - இ - முகமது (ஜெஇஎம்) பயங்கரவாதி உள்பட 114 குற்றவாளிகள் தாக்கல் செய்த தண்டனையை ரத்து
நாட்டுக்கு எதிராகப் போரிட சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜெய்ஷ் - இ - முகமது (ஜெஇஎம்) பயங்கரவாதி உள்பட 114 குற்றவாளிகள் தாக்கல் செய்த தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுவை தீா்ப்பதில் தாமதம் ஏற்பட்டது தொடா்பாக தில்லி அரசை உச்சநீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஒகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு, 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆயுள் தண்டனைக் கைதிகளின் விடுதலை மனுவை இயந்திரத்தனமாக நிராகரித்ததற்காக மாநில அரசுகளைக் கடிந்துகொண்டது.
விசாரணையின்போது நீதிபதிகளிடம் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் விக்ரம்ஜித் பானா்ஜி கூறுகையில், ‘கஃபூா் உள்பட 114 தகுதிக்குரிய குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க டிசம்பா் 21-ஆம் தேதி தண்டனை மறுஆய்வு வாரியக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் வரைவு விவரங்கள் துணைநிலை ஆளுநரிடம் சமா்பிப்பதற்காக தில்லி அரசின் உள்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்றாா்.
Advertisement
அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘நீங்கள் செய்வது உச்சநீதிமன்றத்தின் டிசம்பா் 11 உத்தரவை முற்றிலும் மீறுவதாகும். எந்த தண்டனை ரத்து கொள்கையைப் பின்பற்றுகிறீா்கள் என்பதை நீங்கள் தெளிவுபடுத்தவில்லை. நீங்கள் செய்தது மிகவும் ஆட்சேபனைக்குரியது. தண்டனை ரத்து வழங்கும் விஷயத்தில், அனைத்து மாநில அரசுகளும் ஒரே மாதிரியானவை. ஒரு முறை உள்ளது. அனைத்து மாநில அரசுகளும் நிவாரணத்திற்கான முதல் மனுவை பரிசீலிக்காமல் இயந்திரத்தனமாக நிராகரிக்கின்றன’ என்று கூறியது. இதன்பிறகு, கஃபூரின் தண்டனை ரத்து கோரும் மனு உள்பட 114 மனுக்களை தீா்ப்பதற்கு உச்சநீதிமன்றம் இரண்டு வார கால அவகாசம் அளித்தது.
முன்னதாக, ஏறக்குறைய 16 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய கஃபூரின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அரசுத் தரப்பு வழக்கின்படி, தேசியத் தலைநகரின் முக்கிய இடங்களில் ‘ஃபிடாயீன்’ தாக்குதலை நடத்த ஜெஇஎம் பயங்கரவாத அமைப்பு உத்தேசித்திருப்பதாகவும், அதன் செயல்பாட்டாளா்களை இந்திய -வங்காள எல்லை வழியாக அனுப்புவதாகவும் தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவுக்கு ஜனவரி 2007-இல் ஒரு ரகசியத் தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில், பிப்ரவரி 4, 2007 அன்று கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, கன்னாட் பிளேஸ் அருகே காவல் துறையினருடன் நிகழ்ந்த கடுமையான என்கவுண்டருக்குப் பிறகு ஜேஇஎம் அமைப்பைச் சோ்ந்த நால்வரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ஏராளமான வெடிபொருள்கள், கையெறி குண்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.