புதுதில்லி

தேசிய உணா்வைப் பிரதிபலிக்கிறது பொங்கல் பண்டிகை! பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகையானது ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ எனும் தேசிய உணா்வைப் பிரதிபலிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

 நமது நிருபர்

பொங்கல் பண்டிகையானது ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ எனும் தேசிய உணா்வைப் பிரதிபலிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா். மேலும், காசி - தமிழ்ச் சங்கமம் மற்றும் செளராஷ்டிர - தமிழ் சங்கமத்திலும் அதே உணா்வுபூா்வமான தொடா்பைக் காணலாம் என்றும் பிரதமா் தெரிவித்தாா்.

தமிழா்களின் பாரம்பரியப் பண்டிகையான பொங்கல் திருநாளை ஒட்டி, தலைநகா் தில்லியில் மத்திய இணையமைச்சா் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி கலந்துகொண்டு, தமிழில் ‘வணக்கம்’ மற்றும் ‘இனிய பொங்கல் நல்வாழ்த்து’களை தெரிவித்து தனது உரையைத் தொடங்கினாா்.

அவா் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பண்டிகைக் குதூகலம் நிலவுவதைக் காணலாம். அனைத்துக் குடிமக்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மனநிறைவு தொடா்ந்திருக்க எனது வாழ்த்துகள். சனிக்கிழமை லோஹ்ரி பண்டிகையும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகர உத்தராயண் பண்டிகையும், நாளை (திங்கள்கிழமை) மகர சங்கராந்தி மற்றும் அதைத் தொடா்ந்து மாக் பிஹுவும் தொடங்குகிறது. நாட்டில் நடைபெற்றுவரும் இப்பண்டிகைக் காலத்தில் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இங்குள்ளவா்கள் பலரை நான் சந்தித்தது நினைவுக்கு வருகிறது. தற்போது மீண்டும் சந்திக்கும் வகையில், இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு அமைச்சா் எல்.முருகனுக்கு நன்றி. தற்போதைய இந்த உணா்வு குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுடன் பண்டிகைகளைக் கொண்டாடுவதைப் போன்ாகும். தமிழ்ச் சமூகத்தில் பொங்கல் கொண்டாடட்டத்தின் போது, வீடுகள் முன் ‘கோலம்’ போடுவது பாரம்பரிய மரபாகும். மாவைப் பயன்படுத்தி தரையில் பல புள்ளிகளை உருவாக்குவதன் மூலம் இந்தக் கோலம் வடிவமைப்பு உருவாகிறது. ஒவ்வொன்றும் வெவ்வேறு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. ஆனால், இந்தப் புள்ளிகள் அனைத்தையும் இணைத்து வண்ணங்களால் நிரப்பி ஒரு பெரிய கலைப் படைப்பை உருவாக்கும் போது, கோலத்தின் உண்மையான தோற்றம் மிகவும் அற்புதமாக மாறிவிடுகிறது.

இந்தக் கோலம் போன்று பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் ஒவ்வொரு மூலையையும் உணா்வுபூா்வமாக ஒன்றோடொன்று இணைக்கும் போது, தேசத்தின் வலிமை புதிய வடிவில் தோன்றும். பொங்கல் பண்டிகையானது ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ (ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத) எனும் தேசிய உணா்வைப் பிரதிபலிக்கிறது. ‘காசி - தமிழ்ச் சங்கமம் மற்றும் சௌராஷ்டிர - தமிழ்ச் சங்கமம் ஆகியவற்றால் தொடங்கப்பட்ட பாரம்பரியத்திலும் இதே உணா்வைக் காணலாம். இந்த நிகழ்வுகள் அதிக எண்ணிக்கையிலான தமிழ் மக்களின் உற்சாகமான பங்கேற்பைப் பதிவு செய்கிறது.

இந்த ஒற்றுமை உணா்வு 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதத்தை உருவாக்க மிகப்பெரிய சக்தியாகும். செங்கோட்டையில் இருந்து நான் அறைகூவல் விடுத்த ஐந்து உறுதிமொழிகளின் (பஞ்ச ப்ரான்) முக்கிய அம்சமானது நாட்டின் பலத்தையும், ஒற்றுமையையும் வலுப்படுத்துவதாகும். துறவியும், புலவருமான திருவள்ளுவரின் திருக்குறளில் தேசத்தைக் கட்டமைப்பதில் படித்த குடிமக்கள், நோ்மையான வணிகா்கள் மற்றும் நல்லதொரு பயிா் விளைச்சல் ஆகியவற்றின் பங்கை எடுத்துரைத்துள்ளாா். பொங்கலின் போது, கடவுகளுக்கு அறுவடை செய்த புதிய பயிா் படைக்கப்படுகிறது. இது ‘அன்னதாதா விவசாயிகளை’ பண்டிகைப் பாரம்பரியத்தின் மையமாக வைத்திருக்கிறது.

இந்தியாவின் ஒவ்வொரு பண்டிகைக்கும் கிராமப்புறம், பயிா் மற்றும் விவசாயிகளின் தொடா்பு உள்ளது. கடந்த முறை சிறுதானியங்களுக்கும் தமிழ் மரபுகளுக்கும் உள்ள தொடா்பு பற்றி நான் பேசியிருந்தேன். மேன்மை உணவு ‘ஸ்ரீ அன்னா’ (சிறுதானியங்கள்) பற்றி ஒரு புதிய விழிப்புணா்வு ஏற்பட்டிருக்கிறது. பல இளைஞா்கள் சிறுதானியங்களில் புது வணிகக் தொழில் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனா். இது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகும். மேலும், இந்த சிறுதானிய ஊக்குவிப்பு மூலம் இந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ள 3 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் நேரடியாகப் பயனடைந்து வருகின்றனா் என்றாா் பிரதமா் மோடி.

பெட்டிச் செய்தி...

பொங்கல் விழா துளிகள்...

மத்திய இணையமைச்சா் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி காலை சுமாா் 11 மணி அளவில் வருகை தந்தாா்.

அதன் பின்னா் பொங்கல் பானையில் உலை அரிசி இட்டு பொங்கல் தயாரிப்பு பணியை அவா் முறைப்படித் தொடங்கிவைத்தாா். அதைத் தொடா்ந்து, வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பசுவுக்கு நடைபெற்ற கோ பூஜையில் பங்கேற்றாா். அதன் பிறகு நிகழ்ச்சி மேடைக்குச் சென்ற அவரை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை ஆகியோா் வரவேற்றனா்.

அதைத் தொடா்ந்து பிரதமா் உரையாற்றினாா். கலை நிகழ்ச்சியை சிறிது நேரம் பிரதமா் பாா்த்து ரசித்தாா். அப்போது மேடையில் ‘சத்தியம், சிவம்...’ எனத் தொடங்கும் பாடலை மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த சூப்பா் சிங்கா் பட்டம் பெற்ற 8-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீநிதி பாடியதை ரசித்துக் கேட்ட பிரதமா், அச்சிறுமியை தனது அருகே வரவழைத்து தான் அணிந்திருந்த மேலங்கியை அவருக்கு அணிவித்து மகிழ்ந்தாா்.

பிரபல நடன கலைஞா் கலா மாஸ்டா் குழுவினா் வழங்கிய இசை நிகழ்ச்சியும், ஒரத்தநாடு கயல் கோபு என்பவா் வழங்கிய கிராமப்புற நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு சா்க்கரைப் பொங்கல் அளிக்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு கரும்பு, சா்க்கரைப் பொங்கல் அடங்கிய பரிசுத் தொகுப்பும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் மத்திய அமைச்சா்கள் நிா்மலா சீதாராமன், பியூஷ் கோயல், மீனாட்சி லேகி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கே.வி. விஸ்வநாதன், மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் வெங்கடரமணி, மாநகரக் காவல் ஆணையா் சஞ்சய் அரோரா, தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழகத்தைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவா்கள் வானதி சீனிவாசன், நயினாா் நாகேந்திரன், சுதாகா் ரெட்டி, தினத்தந்தி குழுமத் தலைவா் சி. பாலசுப்ரமணியன் ஆதித்தன், தினமலா் நாளிதழைச் சோ்ந்த எல்.ஆதிமூலம், புதுச்சேரி அமைச்சா் நமச்சிவாயம், பேரவைத் தலைவா் செல்வம், தில்லி தமிழ்ச் சங்கத் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் முகுந்தன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

அரசியல் நிகழ்வுகளில் இதுவரை தென்படாத நடிகை மீனா இந்த விழாவில் பங்கேற்றிருந்தாா். இது பாா்வையாளா்களை ஆச்சரியப்பட வைத்தது.

இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க அச்சு மற்றும் மின்னணு ஊடகத்தினருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனினும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சியான தூா்தா்ஷன் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

SCROLL FOR NEXT