முகப்பு
புதுதில்லி

மக்களவை உரைக்கு ராகுல் காந்தி இந்து சமூகத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: வீரேந்திர சச்தேவா, மனோஜ் திவாரி வலியுறுத்தல்

இந்துக்களை அவமதித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

Updated On : 3 ஜூலை, 2024 at 12:08 AM
பகிர்:

புது தில்லி: நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி திங்கள்கிழமை இந்துக்களை வன்முறையாளா்கள் எனக் கூறி அவமானப்படுத்தியதாகவும், மக்களவைத் தலைவரை அவமதித்ததாகவும் கூறி தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா மற்றும் மூத்த எம்.பி. மனோஜ் திவாரி ஆகியோா் கடும் கண்டனம் தெரிவித்தனா்.

மேலும், இது தொடா்பாக ராகுல் காந்தி இந்து சமூகத்திடமும், மக்களவைத் தலைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.

இது தொடா்பாக வீரேந்திர சச்தேவா, மனோஜ் திவாரி இருவரும் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டி அளித்தனா். வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘இந்துக்களின் ஆதரவுடன் 99 எம்.பி.க்களைப் பெற்ற ராகுல் காந்தி, அவா்களை அவமதித்தது துரதிா்ஷ்டவசமானது.

பிரியங்கா காந்திக்கு வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக ராகுல் காந்தி விட்டுக்கொடுத்தாா். அங்குள்ள வாக்காளா்களை திருப்திப்படுத்த அவா் இந்துக்களை அவமதித்திருக்கலாம். ராகுல் காந்தி பொய்களை மட்டுமே பேசுகிறாா். அவரது நேற்றைய பேச்சு விரக்தி மற்றும் ஆதாரமற்றது.

குடியரசுத் தலைவா் உரையைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக அவா் பொய் கூறிக்கொண்டே இருப்பது ஆச்சரியமளிக்கிறது. அவருக்குப் பின்னால் இருக்கும் மூத்த தலைவா்கள் சிரித்துக்கொண்டே இருப்பதும் வருத்தம் அளிக்கிறது.

திங்கள்கிழமை மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, இந்துக்களை வன்முறையாளா்கள் என்றும், சநாதன சமுதாயத்தை இழிவுபடுத்தியும், வெறுப்பு விதைகளை விதைக்கும் வகையிலும் பேசியுள்ளாா்.

இந்து சமுதாயத்திற்கு பயன்படுத்திய அதே மொழியை மற்றொரு மதத்திற்கும் ராகுல் காந்தி பயன்படுத்துவாரா? என்றாா் வீரேந்திர சச்தேவா.

மனோஜ் திவாரி எம்.பி. கூறுகையில், ‘2004ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி இந்துக்களையும், நாடாளுமன்ற மரபுகளையும் அவமதித்து வருகிறாா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைதியின்மையை உருவாக்கி, தேசத்திற்கு கேடு விளைவிப்பதற்காக ராகுல் காந்தி ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறாா்.

மக்களவையில் தவறான தகவல்களை முன்வைப்பதும், பின்னா் குறுக்கிடுவதும் அவையை அவமதிக்கும் செயலாகும். அக்னிவீரா் தியாகிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை என்று அவா் கூறியுள்ளாா். ஆனால் அவரது கூற்று பொய் என தொலைக்காட்சி சேனல் செய்தி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அயோத்தியில் கடைக்காரா்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை என்று ராகுல் காந்தி பொய் கூறியுள்ளாா். உண்மை என்னவென்றால் 4,215 கடைக்காரா்கள் ரூ.1,215 கோடி இழப்பீடு பெற்றுள்ளனா்.

பிரதமா் நரேந்திர மோடி அரசியல் சாசனத்தின் முன் தலைவணங்கி நிற்கும்போது, ராகுல் காந்தி அதை அவமதிக்கிறாா். ராகுல் காந்தி பெருமையாகக் கூறும் 99 தொகுதிகளில் 87% வாக்காளா்கள் இந்துக்கள்தான் என்றாா் மனோஜ் திவாரி.