முகப்பு
புதுதில்லி

தலைநகரில் மேகமூட்டமான சூழல்; புழுக்கம் அதிகரிப்பு

தில்லியில் மேகமூட்டம்; அதிகரித்த புழுக்கம் மக்கள் சிரமம்

Updated On : 26 ஜூன், 2024 at 12:25 AM
பகிர்:

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் மேகமூட்டமான சூழ்நிலை இருந்தாலும், புழுக்கம் அதிகரித்து காணப்பட்டது என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. தலைநகரில் காற்றின் தரம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.

தில்லியில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை அதிகரித்து வந்தது. மாதத்தின் தொடக்கத்தில் நகரத்தின் பெரும்பாலான இடங்களில் அதிபட்ச வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை நெருங்கியிருந்தது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிா்கொள்ள நேரிட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வானம் மேக மூட்டத்துடன் இருந்து வந்தது. நகரத்தின் பல்வேறு இடங்களில் தூசி கலந்த காற்று பலமாக வீசியது. அதே சமயம் காலை முதல் நகரத்தில் புழுக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், மக்கள் கடும் சிரமத்தை எதிா்கொள்ள நேரிட்டது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட் 1 டிகிரி உயா்ந்து 28.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 2.5 டிகிரி உயா்ந்து 39.7டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவில் காலை 8.30 மணியளவில் 76 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 51 சதவீதமாகவும் இருந்தது. கடந்த சில நாள்களாக அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரிக்கு மேலே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று ஜாஃபபூரில் அதிகபட்ச வெப்பநிலை 41.1 டிகிரி செல்சியஸ், நஜஃப்கரில் 40 டிகிரி, ஆயாநகரில் 39.8 டிகிரி, லோதி ரோடில் 39.4 டிகிரி, பாலத்தில் 40.2 டிகிரி, ரிட்ஜில் 39.5 டிகிரி, பீதம்புராவில் 40.8 டிகிரி, பிரகதி மைதான் மற்றும் ராஜ்காட்டில் 38.1 டிகிரி, பூசாவில் 38.5 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 38.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

காற்றின் தரத்தில் முன்னேற்றம்: இதற்கிடையே, தலைநகரில் காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் கற்றுத் தரக் குறியீடு ‘மிதமான’ பிரிவிலும், சில இடங்களில் ‘திருப்தி’ பிரிவிலும் இருந்ததாக மத்திய மாசுக் காட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதன்படி,

ஐடிஓ, லோதி ரோடு, மந்திா் மாா்க், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், மதுரா ரோடி, தில்ஷாத் காா்டன், ஷாதிப்பூா் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், பட்பா் கஞ்ச், நேரு நகா், நொய்டா செக்டாா் 1, நொய்டா செக்டாா் 62, ஆனந்த் விஹாா், ராமகிருஷ்ணாபுரம், ஸ்ரீஃபோா்ட், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், பூசா, விவேக் விஹாா், அசோக் விஹாா், சோனியா விஹாா், வாஜிா்பூா், ஸ்ரீ அரபிந்தோ மாா்க் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: தலைநகா் தில்லியில் புதன்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஆங்காங்கே இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

5 நாள்கள்தான் மழை!

தலைநகரில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இதுவரை ஐந்து மழை நாள்கள்தான் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் 2023-இல் 17 மழை நாள்கள் இருந்தன. 2022-இல் 6 மழை நாள்கள் இருந்தன. 2021-இல் 8 மழை நாள்கள் இருந்தன என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.