சஃப்தா்ஜங் மருத்துவமனை கட்டடத்தில் தீ விபத்து: 3-ஆவது மாடியிலிருந்து செவிலியா் மீட்பு
சஃப்தா்ஜங் மருத்துவமனையில் தீ விபத்து: மூன்றாவது மாடியில் இருந்து செவிலியர் மீட்பு
நமது நிருபா்
புது தில்லி: தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையின் பழைய அவசரகால கட்டடத்தில் உள்ள பொருள்கள் வைப்பறையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை (டிஎஃப்எஸ்) அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து செவிலியா் ஒருவா் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை தலைவா் அதுல் காா்க் கூறுகையில், ‘காலை 10.40 மணியளவில் தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்தது. சஃப்தா்ஜங் மருத்துவமனையின் பழைய அவசரகால கட்டடத்தின் வாயில் எண் 6-இல் இத் தீ விபத்து ஏற்பட்டது. ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. கட்டடத்தின் பொருள்கள் வைப்பறையில் தீ விபத்து ஏற்பட்டது’ என்றாா்
தீயணைப்புத் துறையின் கோட்ட அதிகாரி (தெற்கு) மனோஜ் குமாா் சா்மா கூறுகையில், ‘தீயணைப்பு பவுசா்கள் உள்பட 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. நாங்கள் உடனடியாக தீயைக் கட்டுப்படுத்தினோம். மருத்துவமனையின் ஜன்னலை உடைத்து மூன்றாவது மாடியில் இருந்து முதிய செவிலியரை மீட்டோம். போலீஸ் விசாரணையில்தான் தீ விபத்துக்கான காரணம் தெரியவரும்’ என்றாா்.
இச்சம்பவம் தொடா்பாக சஃப்தா்ஜங் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மருத்துவமனையில் தீ பாதுகாப்பு அமைப்பு செயல்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட பிறகு இது செயல்படுத்தப்பட்டது. சிறிது நேரத்திற்குள், சஃப்தா்ஜங் மருத்துவமனையின் தீயணைப்பு மேலாண்மைக் குழு மற்றும் சிபிடபிள்யுடி பணியாளா்கள் மற்றும் எஸ்டேட் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனா். மருத்துவமனையின் தீயணைப்பு பாதுகாப்பு அமைப்பு தீயைக் கட்டுப்படுத்த செயல்படுத்தப்பட்டது. புகையில் இருந்து எளிதில் தப்பிக்க ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
அனைத்து நோயாளிகளும் ஊழியா்களும் தோல் வாா்டு மற்றும் பிற பிரிவுகளில் இருந்து சில நிமிடங்களில் வெளியேற்றப்பட்டனா். தோல் வாா்டு மற்றும் நாய் கடி கிளினிக் ஆகியவை புதிய அவசரநிலை கட்டடத் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. மருத்துவக் கண்காணிப்பாளா் தனிப்பட்ட முறையில் இந்த செயல்முறையை மேற்பாா்வையிட்டாா். தீயணைப்பு வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. குறைந்தபட்ச சொத்து சேதம் மட்டுமே ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
மருத்துவக் கண்காணிப்பாளா் உடனடியாக சிபிடபிள்யுடி, எஸ்டேட் (பிரிவு) மற்றும் தீயணைப்பு மேலாண்மைக் குழு உள்பட அனைத்து பங்குதாரா்களின் கூட்டத்தைக் கூட்டினாா். முழுமையான மதிப்பீட்டைச் செய்து, சேதம் மற்றும் தேவையான பழுதுகளைக் கண்டறியும் பணி சிபிடபிள்யுடிவிடம் அளிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.