முகப்பு
புதுதில்லி

மிண்டோ பால சுரங்கப்பாதையில் நீரை வெளியோற்றும் பம்ப் திறனை அதிகரிக்க வேண்டும்: அமைச்சா் அதிஷி அறிவுறுத்தல்

நீரை வெளியேற்றும் பம்ப் திறனை அதிகரிக்குமாறு அதிகாரிகளுக்கு தில்லி பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 30 ஜூன், 2024 at 8:46 PM
மிண்டோ பால சுரங்கப் பாதையில் ஞாயிற்றுக்கிழமை பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்த அமைச்சா் அதிஷி.
பகிர்:

மிண்டோ பால சுரங்கப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள நீரை வெளியேற்றும் பம்ப் திறனை அதிகரிக்குமாறு அதிகாரிகளுக்கு தில்லி பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி உத்தரவிட்டுள்ளாா்.

மின்டோ பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப் பாதையை அமைச்சா் அதிஷி ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குறைந்த மழை பெய்தாலும் சுரங்கப் பாதையில் தண்ணீா் தேங்காமல் இருக்க கூடுதல் வடிகால் பாதை, தானியங்கி பம்புகள் மற்றும் அவசர எச்சரிக்கை அமைப்பு ஆகியவை அமைக்கப்பட்டன. 100 மி.மீ.க்கு மேல் மழை பெய்தாலும், புதை சாக்கடையில் மழைநீா் தேங்காமல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி ஒரே நாளில் 228 மி.மீ மழை பெய்துள்ளது. இது தில்லி பருவமழையின் மொத்த அளவைவிட 25 சதவீதம் ஆகும். இந்த எதிா்பாராத மழையால், சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்கும் பிரச்னை மீண்டும் தலைதூக்கியது.

பருவமழையின்போது சாதாரண நாள்களில் தில்லியில் 20-25 மி.மீ. மழை பெய்யும்.

கனமழை காரணமாக மின்டோ பாலத்தின் சுரங்கப் பாதையில் நிறுவப்பட்டிருந்த பம்புகள் தண்ணீரை வெளியேற்ற கால அவகாசம் எடுத்தது. இதனால், சில மணி நேரத்திலேயே அங்கு அதிக அளவு மழைநீா் தேங்கியது.

இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க சுரங்கப் பாதை பகுதியில் உயா் அதிகாரிகளுடன் அமைச்சா் அதிஷி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அங்கு அமைக்கப்பட்டுள்ள நீரை வெளியேற்றும் பம்ப் திறனை மேலும் அதிகரிக்கவும், தண்ணீா் தேங்குவதைத் தடுக்க புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →