முகப்பு
புதுதில்லி

காற்றின் தரம் தொடா்ந்து ‘மிதமான’ பிரிவில் நீடிப்பு! இன்று பலத்த காற்றுக்கு வாய்ப்பு

Updated On : 8 மார்ச், 2024 at 10:59 PM
பகிர்:

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் குளிரின் தாக்கம் உணரப்பட்டது. இதைத் தொடா்ந்து, முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.6 டிகிரியாக பதிவாகியிருந்தது. காற்றின் தரம் தொடா்ந்து ‘மிதமான’ பிரிவில் நீடித்தது.

தில்லியில் கடந்த வாரம் அதிகரித்திருந்த வெயிலின் தாக்கம் இந்த வாரம் சற்று குறைந்திருந்தது. இந்நிலையில், மாா்ச் முதல் வாரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 9-10 டிகிரி என்ற அளவில் இருந்து வந்தது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்த 5 டிகிரி குறைந்து 9.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 1 டிகிரி குறைந்து 27.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 75 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 47 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் நகரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை. முங்கேஸ்பூரில் 9.6 டிகிரி: இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.6 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 9.6 டிகிரி, , ஆயாநகரில் 10.8 டிகிரி, லோதி ரோடில் 10 டிகிரி , நரேலாவில் 10.8 டிகிரி, பாலத்தில் 13 டிகிரி, ரிட்ஜில் 11 டிகிரி, பீதம்புராவில்14.1 டிகிரி, பிரகதி மைதானில் 11.9 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 13.5 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. காற்றின் தரம்: தலைநகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. காலை 9 மணி நிலவரப்படி ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 159 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது ‘மிதமான’ பிரிவில் வருகிறது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தகவல்கள் மூலம் தெரியவருகிறது. இதன்படி, பூசா, பஞ்சாபி பாக், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், முண்ட்கா, மந்திா் மாா்க், வாஜிா்பூா், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், அசோக் விஹாா், , நியூ மோதி பாக் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றுத் தரக்குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. அதேசமயம், துவாரகா செக்டாா்-8 (202), ஷாதிப்பூா் (222)ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு மேலே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. முன்னறிவிப்பு: இந்நிலையில், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (மாா்ச் 9) பகல் நேரத்தில் தரைமேற்பரப்புக் காற்று 25-30 கி.மீ. வேகத்தில் வலுவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.