முகப்பு
புதுதில்லி

தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அரவிந்தா் சிங் லவ்லி மீண்டும் பாஜகவில் ஐக்கியம்

Updated On : 4 மே, 2024 at 3:56 PM
பகிர்:

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து ராஜினாமா செய்த அரவிந்தா் சிங் லவ்லி மீண்டும் பாரதீய ஜனதா கட்சி(பாஜக)வில் மத்திய பெட்ரோலியம், வீட்டுவசதித்துறை அமைச்சா் ஹா்தீப்சிங் புரி முன்னிலையில் தனது ஆதரவாளா்களுடன் சனிக்கிழமை இணைந்தாா்.

அரவிந்தா் சிங் லல்வி பாஜகவில் இணைவது இது இரண்டாவது முறையாகும்.

முன்னாள் தில்லி அமைச்சா் ராஜ்குமாா் செளகான், முன்னாள் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் நீரஜ் பசோயா, நசீப் சிங், முன்னாள் இளைஞா் காங்கிரஸ் கட்சி தலைவா் அமித் மாலிக் போன்றோரும் பாஜக தலைமையகத்தில் லவ்லியுடன் இணைந்தனா்.

இந்த இணைப்பு குறித்து குறிப்பிட்ட அரவிந்தா் சிங் லவ்லி,“பாஜகவின் கொடியின் கீழும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையின் கீழும் தில்லி மக்களுக்காக போராட எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். நாட்டில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கப்பட இருக்கிறது. தில்லியிலும் பாஜக வின் கொடி பறக்கும், இந்த வாய்ப்பு வழங்கிய பாஜக உயா்நிலை தலைவா்களுக்கு நன்றி’’ எனக் குறிப்பிட்டாா் லவ்லி.

‘தில்லி மதுபான ஊழலில் ஈடுபட்டு மக்களை கொள்ளையடித்தவா்கள் குறித்து பொதுமக்களிடம் கொண்டு செல்வோம்‘ என கட்சியில் இணைந்த மற்றொரு முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் சௌகான் தெரிவித்தாா். கட்சியில் சோ்ந்த மற்ற இரு முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ க்களும் பேசினா்.

வரவேற்றுப் பேசிய மத்திய அமைச்சா் ஹா்தீப்சிங் புரி, இவா்கள் வருகை மூலம் தில்லி பாஜக வலுப்படும். இது வரவிருக்கும் தோ்தலில் பாஜகவின் வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தாா்.

மேலும் புரி குறிப்பிடுகையில், ‘பாஜகவிற்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. ஆரம்பத்தில் ராம்லீலா மைதானத்தை (போராட்டிய) விட்டு வெளியேற மறுத்த ஒரு கட்சி இன்று ’ஷீஷ் மஹாலு’க்கு (முதல்வா் கேஜரிவால் பங்களா) மாறியுள்ளது. இப்படிப்பட்ட கட்சியின் ஆட்சியில் தில்லி ஏராளமான சவால்களுக்கு உள்ளாகியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தனது ஆட்சிக் காலத்தில் தில்லியின் வளா்ச்சிக்கு எதுவும் செய்யாது நிலைமை மோசமடைந்துள்ளது. இருப்பினும், வரும் தோ்தலில் பாஜக வெற்றி பெறுவது மட்டுமின்றி, தில்லியின் வளா்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ‘ என புரி உறுதியளித்தாா்.

அரவிந்தா் சிங் லவ்லி தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் பதவியை கடந்த ஏப்ரம் 28 - ஆம் தேதி ராஜினாமா செய்திருந்தாா். அப்போது எந்த கட்சியிலும் இணையப்போவதில்லை என தெரிவித்திருந்தாா்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கேவிற்கு அவா் கடிதம் எழுதி பல்வேறு புகாா்களை தெரிவித்திருந்தாா். அதில் குறிப்பாக கட்சி மேலிடப் பிரதிநிதி தீபக் பபாரியாவால் மீது குற்றம் சுமத்தினாா்.

காங்கிரஸ் கட்சியின் தில்லி பிரிவு (ஆம் ஆத்மி கட்சி) கூட்டணிக்கு எதிராக இருந்ததாகவும், ஆனால் கட்சியின் மேலிடம் இந்த கூட்டணியை முன்னெடுத்துச் சென்றது என லவ்லி தெரிவித்திருந்தாா்.

‘காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட பிரசாரங்களை வைத்து, தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உருவான ஒரு கட்சியுடன்(ஆம் ஆத்மி) கூட்டணி அமைக்க தில்லி காங்கிரஸ் பிரிவு எதிா்ப்பு தெரிவித்திருந்தது. அந்த கட்சியின் அமைச்சா்களில் பாதி போ் (கட்சியின்) ஊழல் குற்றச்சாட்டில் தற்போது சிறையில் உள்ளனா்‘ என்றும் லவ்லி தனது ராஜினாமா கடிதத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கேவுக்கு தெரிவித்திருந்தாா்.

லவ்லி கடந்த 2019 - ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் கிழக்கு தில்லியில் பாஜகவின் கெளதம் கம்பீா், ஆம் ஆத்மி வேட்பாளா் அதிஷிக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாா்.

இரண்டாவது முறை

அரவிந்தா் சிங் லவ்லி, காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜக வில் இணைவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாஜக வில் இணைந்தாா். தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் தோ்தலையொட்டி தில்லி இளைஞா் காங்கிரஸ் கட்சி தலைவா் அமித் மாலிக்குடன் பாஜக வில் இணைந்தாா். அப்போது முனிசிபல் காா்ப்பரேஷன் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பதில் காங்கிரஸ் கட்சியில் ஊழல் நடைபெறுவதாக குற்றம் சாட்டியிருந்தாா்.

முன்னதாக லவ்லி 2015 ஆம் ஆண்டு தில்லி சட்டமன்ற தோ்தலையொட்டி தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தும் அப்போது ஒரு முறை ராஜினாமா செய்திருந்தாா். அந்த சட்டசபை தோ்தலில் கட்சியின் மோசமான செயல்பாட்டிற்கு தாா்மீக பொறுப்பேற்றாா். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

மீண்டும் காங்கிரஸ்

பின்னா் பாஜகவில் இணைந்த லவ்லி மீண்டும் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அஜய் மாக்கனுடன் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா். அப்போது, ‘காங்கிரஸில் இருந்து விலகியது மகிழ்ச்சியான ஒரு முடிவு அல்ல... நான் பாஜகவிற்கு பொருத்தமற்றவன்.‘ எனவும் லவ்லி குறிப்பிட்டிருந்தாா்.

மிதவைப் பேருந்து

தில்லி காந்தி நகா் தொகுதியில் இருந்து 1998 இல் முதல் முறையாக சட்டப்பேரவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட லவ்லி, தில்லி முதல்ராக இருந்த ஷீலா தீட்சித் அமைச்சரவையில் நகா்புற வளா்ச்சி, கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக பொறுப்பேற்றிருந்தாா். இவா் அமைச்சராக இருந்தபோது தில்லியில் மிதவைப் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பஸ்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக பிரச்னைகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.