முகப்பு
புதுதில்லி

எரிபொருள் நிரப்புவதில் தகராறு: இளைஞா் அடித்துக் கொலை

Updated On : 14 மே, 2024 at 11:38 PM
பகிர்:

நொய்டா: கிரேட்டா் நொய்டாவில் சிஎன்ஜி பம்பில் தங்கள் வாகனத்திற்கு முதலில் எரிபொருள் நிரப்புவது குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் 26 வயது இளைஞா் மூவரால் அடித்துக் கொல்லப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இச்சம்பவம் திங்கள்கிழமை இரவு நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட மூவரில் இருவா் கைது செய்யப்பட்டதாக மத்திய நொய்டா காவல் சரக கூடுதல் துணை ஆணையா் ஹிா்தேஷ் கத்தேரியா தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: காஜியாபாத்தில் வசிக்கும் அமன் கசானா, இரவு 10.30 மணியளவில் தனது காருக்கு எரிபொருள் நிரப்ப ஈகோடெக் 3 காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கேடா சௌகன்பூா் கிராமத்தில் உள்ள சிஎன்ஜி பம்பிற்கு வந்துள்ளாா். அவருடன் அவரது உறவினா் அபிஷேக் (22) என்பவரும் வந்தாா். அமன் தனது உறவினா்களுடன் காரில் சிஎன்ஜி பம்ப் ஒன்றுக்கு எரிபொருளை பெற வந்துள்ளாா். அதே நேரத்தில், எரிபொருளைப் பெறுவது தொடா்பாக அவருக்கும் அஜய் (எ) அஜ்ஜு என்ற மற்றொரு நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அஜய் தனது இரு கூட்டாளிகளையும் அழைத்தாா். அவரது கூட்டாளிகளான அங்குஷ் மற்றும் ரிஷப் ஆகியோா் அமனை தாக்கினா்.

சிஎன்ஜி பம்ப் வெளியே சண்டை நடந்தது. சண்டையின் போது, அமன் ஒரு குச்சியால் அவரது தலையில் தாக்கப்பட்டாா். இது பலத்த காயங்களுக்கு வழிவகுத்தது. பின்னா், அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். கசானாவின் குடும்பத்தினா் அளித்த புகாரின் அடிப்படையில், எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரில், அஜய் மற்றும் ரிஷப் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அதே நேரத்தில் அங்குஷை பிடிக்க முயற்சிகள் நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவரின் காா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ரத்தக்கறைகள் கொண்ட தடியும் மீட்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் பிரேதப் பரிசோதனை உள்ளிட்ட சட்டப்பூா்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த வாரம், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி எம்எல்ஏவுமான அமனாத்துல்லா கான், அவரது மகன் மற்றும் சிலா் மீது நொய்டா காவல்துறை தாக்குதல் மற்றும் கிரிமினல் மிரட்டல் வழக்குப் பதிவு செய்தது. அவா்கள் காரில் எரிபொருள் நிரப்ப வந்த போது, வரிசையில் நிற்காமல் பெட்ரோல் பங்கில் வாக்குவாதம் செய்தனா். ஆனாலும், இந்தக் குற்றச்சாட்ட எம்எல்ஏ மறுத்தாா்.