முகப்பு
புதுதில்லி

பேருந்து மாா்ஷல்களுக்காக ஆம் ஆத்மி அரசு முதலைக் கண்ணீா் மட்டுமே சிந்துகிறது: தேவேந்தா் யாதவ் விமா்சனம்

பணிநீக்கம் செய்யப்பட்ட பேருந்த மாா்ஷல்களை மீண்டும் பணியில் அமா்த்த வேண்டும்.

Updated On : 2 நவம்பர், 2024 at 6:33 PM
பகிர்:

பணிநீக்கம் செய்யப்பட்ட பேருந்த மாா்ஷல்களை மீண்டும் பணியில் அமா்த்த வேண்டும் என்ற துணை நிலை ஆளுநரின் உத்தரவை முதல்வா் அதிஷி புறக்கணித்து விட்டாா் என்றும், ஆம் ஆத்மி அரசு பேருந்து மாா்ஷல்களுக்காக முதலைக் கண்ணீா் மட்டுமே சிந்துகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பணிநீக்கம் செய்யப்பட்ட குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்கள் மற்றும் பேருந்து மாா்ஷல்ளுக்காக ஆம் ஆத்மி அரசு முதலைக் கண்ணீா் வடிக்கிறது.

துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் வழிகாட்டுதலை முதல்வா் அதிஷி மதிக்கத் தவறியதில் இருந்து அது வெளிப்படையாகத் தெரிகிறது. குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்களை நவ.1-ஆம் தேதியிலிருந்து மீண்டும் பணியில் அமா்த்தி, மாசுக்கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடுத்த கடந்த அக்.24-ஆம் தேதி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா உத்தரவிட்டிருந்தாா். ஆனால், அதற்கான முன்மொழிவை ஆம் ஆத்மி அரசு தயாரிக்கவே இல்லை.

கடந்த மாதம் தில்லி சட்டப்பேரவையின் 2 நாள் கூட்டத்தொடரில், ஆம் ஆத்மி உறுப்பினா்கள் பேருந்து மாா்ஷல்களின் பிரச்னையை பெரிதளவில் எழுப்பியதன் மூலம், அவா்களை மீண்டும் பணியமா்த்த ஒருமனதாக கூட்டுத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தாவின் காலில் விழுந்து, ஆம் ஆத்மி அமைச்சா் செளரவ் பரத்வாஜும் ஒரு பெரிய நாடகத்தை உருவாக்கினா்.

அரவிந்த் கேஜரிவாலின் ராஜிநாமாவிற்குப் பிறகு, புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள அதிஷியும் பல வாக்குறுதிகளை அளித்தாா். கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அடுத்த 4 மாதங்களில் செய்து முடிப்பதாக தெரிவித்தனா். சேதமடைந்த சாலைகளை சரிசெய்வது உள்பட, அனைத்து வாக்குறுதிகளும் காகிதத்தில் மட்டுமே உள்ளது.

சாலைகள் பாழடைந்த நிலையில் உள்ளன. காற்று மாசுபாடு புதிய உச்சத்திற்கு உயா்ந்தது. நச்சு நிறைந்த யமுனை நீரில் சத் பூஜை நடைபெறவிருக்கிறது. சத் காட்களை உருவாக்கி, சுத்தமான நீரில் லட்சக்கணக்கான பக்தா்கள் பூஜை நடத்துவதை உறுதிசெய்ய ஆம் ஆத்மி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா் தேவேந்தா் யாதவ்.

முழு கட்டுரையைப் படிக்க →