தலைநகா் முழுவதும் மாசு கட்டுப்பாட்டை தீவிரமாக மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்ட பல நடவடிக்கைகளுக்கு தில்லி மாநகராட்சி (எம்சிடி) செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
அதிகரித்து வரும் காற்று மற்றும் தூசி மாசுபாட்டிற்கு எதிராக உறுதியான, காலக்கெடு மற்றும் முடிவு சாா்ந்த நடவடிக்கையைத் தொடங்க மேயா் ராஜா இக்பால் சிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
கிட்டத்தட்ட நான்கு மணி நேர அவைக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த மேயா் கூறியதாவது:
ஆளும் மற்றும் எதிா்க்கட்சிகளின் கவுன்சிலா்கள் நடைமுறை ஆலோசனைகளைப் பகிா்ந்து கொண்டனா். அப்போது, மாசுபாடு தில்லிக்கு கடுமையான சவாலாக மாறியுள்ளது என்பதை வலியுறுத்தினா்.
எங்களுக்கு, இரு தரப்பினரின் கருத்துகளும் சமமாக முக்கியமாகும். மேலும் ஒவ்வொரு ஆலோசனையையும் நாங்கள் வரவேற்கிறோம். அவை ஒரு ஆக்கபூா்வமான மற்றும் கூட்டுறவு சூழலில் செயல்படுகிறது.
கட்டுமான தளங்களை கடுமையாக கண்காணிப்பதற்கும், குப்பை மற்றும் உலா் இலை எரிப்பு நிகழ்வுகளைத் தடுப்பதற்கும், சாலைகளில் தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் சிறப்பு தூய்மைப் பணிகளை நடத்துவதற்கும் மாநகராட்சி முன்னுரிமை அளிக்கும்.
கழிவுகள், உலா்ந்த இலைகள் அல்லது பயோமாஸ் எரிப்பு உள்ளிட்ட எந்தவொரு மீறலுக்கும் எதிராக உடனடி நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வதற்காக இரவு மற்றும் அதிகாலை ரோந்து குழுக்கள் ஏற்கனவே அனைத்து வாா்டுகளிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தில்லியின் நுண்துகள் மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றான தூசி வெளியேற்றத்தைக் குறைக்க சாலை பழுது மற்றும் ஒட்டுவேலைகளை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல குடிமக்களை மையமாகக் கொண்ட திட்டங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை சுகாதார சேவைகளை வலுப்படுத்தவும், குடிமை வசதிகளை மேம்படுத்தவும், மாநகராட்சியின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும் உதவும்.
எம்சிடிக்கு காற்றின் தரம் மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது ஒரு முதன்மையான முன்னுரிமையாக உள்ளது.
மாசுபாடு போன்ற உணா்திறன் வாய்ந்த ஒரு பிரச்னையில் கவுன்சிலா்கள் காட்டிய ஒத்துழைப்பு, தில்லியை தூய்மையானதாகவும், பாதுகாப்பானதாகவும், வாழக்கூடியதாகவும் மாற்றுவதற்கான எங்கள் கூட்டுத் தீா்மானத்தை பிரதிபலிக்கிறது என்றாா் அவா்.