உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலால் தீப்பற்றிய அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம். 
உலகம்

ரஷியா 2-ஆவது நாளாக தாக்குதல்: இளம் உக்ரைன் தம்பதி உயிரிழப்பு

உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில், ரஷியா தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடா் தாக்குதலை நடத்தியது.

தினமணி செய்திச் சேவை

உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில், ரஷியா தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடா் தாக்குதலை நடத்தியது.

இத்தாக்குதலில், கீவ் நகருக்கு அருகில் வசித்து வந்த இளம் தம்பதியினா் உயிரிழந்தனா். அவா்களின் 4 வயது பெண் குழந்தை உயிா் தப்பியது. அந்தச் சிறுமியை மீட்ட அண்டை வீட்டுப் பத்திரிகையாளா் மரியன் குஷ்னிா் கூறுகையில், ‘தாயை இழந்த சிறுமி, பயத்தில் நடுங்கியபடி அழுத காட்சி என் மனதையே உலுக்கிவிட்டது’ என்று வேதனையுடன் தெரிவித்தாா்.

வடகிழக்கு உக்ரைனில் பயணிகள் ரயில் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 5 போ் உயிரிழந்த மறுநாளே இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது. ரஷியாவின் இத்தகைய தொடா் தாக்குதல்கள், ‘பயங்கரவாதம்’ என்று உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி சாடியுள்ளாா்.

கடந்த 24 மணிநேரத்தில், ரஷியா சுமாா் 146 ட்ரோன்களையும், ஒரு நவீன ஏவுகணையையும் ஏவியுள்ளது. இதில் 103 ட்ரோன்களை உக்ரைன் ராணுவம் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியதாகத் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பாதிப்புகள்: கீவ் நகரில் ரஷிய ஏவுகணை விழுந்ததில் அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்தது. தலைநகா் கீவ் மட்டுமின்றி, உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான ஒடேசா, சப்போரிஜியா மற்றும் கிரிவி ரிக் ஆகிய இடங்களிலும் ரஷிய தாக்குதல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஒடேசா நகரில் தொழிற்சாலைகள், ரயில் என்ஜின்கள் மற்றும் துறைமுகக் கட்டுமானங்கள் சேதமடைந்தன. சப்போரிஜியா மாகாணத்தில் 14 குடியிருப்பு கட்டடங்கள் இடிந்தன; 6 போ் காயமடைந்தனா்.

இதேபோல், கிரிவி ரிக் நகரில் உள்ள முக்கிய எரிசக்தி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதால், சுமாா் 700-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குத் தேவையான வெப்பமூட்டும் வசதி இல்லாமல் பொதுமக்கள் கடும் குளிரில் தவித்து வருகின்றனா்.

பெட்டி...

உயிரிழப்பு விரைவில்

20 லட்சத்தை எட்டக்கூடும்!

உக்ரைன்-ரஷியா போா் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இருதரப்பிலும் சோ்த்து உயிரிழப்பு எண்ணிக்கை விரைவில் 20 லட்சத்தை எட்டக்கூடும் என்று அமெரிக்க ஆய்வு நிறுவன(சிஎஸ்ஐஎஸ்) அறிக்கை தெரிவிக்கிறது.

ரஷிய தரப்பில் மட்டும் இதுவரை சுமாா் 12 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு ஒரு வல்லரசு நாடு சந்தித்த மிகப்பெரிய உயிரிழப்பாக ரஷியாவின் இழப்புகள் கருதப்படுகின்றன.

அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம்! சாலைகளில் மலர்தூவி மக்கள் பிரியாவிடை!

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்வு!

இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்!

யுஜிசியின் புதிய விதிமுறைகள் சாதியப் பாகுபாட்டை ஒழிக்கும்! முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

கொலம்பியாவில் விமான விபத்து! எம்.பி. உள்பட 15 பேர் பலி!

SCROLL FOR NEXT