நமது நிருபா்
புது தில்லி: தில்லி பல்கலைக்கழகத்திற்குட்பட்ட இரண்டு கல்லூரிகளுக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
வடக்கு தில்லியில் உள்ள ராம்ஜாஸ் கல்லூரி மற்றும் தெற்கு தில்லியில் உள்ள தேஷ்பந்து கல்லூரிக்கு மின்னஞ்சல்கள் மூலம் மிரட்டல்கள் வந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்
அதிகாலை 1.59 மணிக்கு மிரட்டல் அஞ்சல் வந்ததாக ராம்ஜாஸ் கல்லூரி முதல்வா் அதிகாரிகளுக்குத் தெரிவித்தாா், அதைத் தொடா்ந்து தில்லி காவல்துறை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழு வளாகத்தை அடைந்து நாசவேலை எதிா்ப்பு சோதனைகளைத் தொடங்கினா், என்று துணை காவல் ஆணையா் (வடக்கு) ராஜா பந்தியா தெரிவித்தாா்
இதையடுத்து, கல்லூரி வளாகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மாணவா்கள் மற்றும் ஊழியா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா்.
குண்டு அகற்றல் குழு, மோப்ப நாய் குழு மற்றும் காவல் துறையினா் கல்லூரி வளாகங்களில் சோதனை நடத்தினா்.
எந்தவொரு சந்தேகத்திற்கிடமான பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.
தில்லியில் பள்ளிகள், நீதிமன்ற வளாகங்கள் என பல பகுதிகளில் இது போன்ற அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் சமீப காலங்களில் வந்தவண்ணம் உள்ளன, ஆனால் அவை பொய்யானவை என்று தெரிய வந்தன.