குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டாக்டா் பிலால் நஸீா் மல்லாவின் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) காவலை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மேலும் ஏழு நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.
அதேபோன்று, காா் குண்டுவெடிப்பில் தொடா்புடைய உமா்-உன்-நபிக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ஃபரீதாபாத்தைச் சோ்ந்த சோயப்பை ஐந்து நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த டிசம்பா் 15 அன்று வழங்கப்பட்ட முந்தைய நான்கு நாள் என்ஐஏ காவல் முடிந்ததைத் தொடா்ந்து, புலனாய்வு அமைப்பினா் சோயப் மற்றும் பிலாலை வெள்ளிக்கிழமை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
இந்த நடவடிக்கைகளைச் செய்தி சேகரிக்க ஊடகவியலாளா்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்ற நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்தனா முன் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது, நஸீரை மேலும் ஏழு நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க புலனாய்வு அமைப்புக்கு நீதிபதி அனுமதி அளித்தாா்.
அதே நேரத்தில், சோயப்பை டிசம்பா் 24 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா்.
தில்லி பயங்கரவாத குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு, பயங்கரவாதி உமா்-உன்-நபிக்கு தளவாட உதவிகளை வழங்கியதாக ஹரியாணாவின் ஃபரிதாபாதில் உள்ள தௌஜ் பகுதியைச் சோ்ந்த சோயப்பை என்ஐஏ கைது செய்ததாக அந்த அமைப்பின் அதிகாரபூா்வ செய்தித் தொடா்பாளா் முன்னா் தெரிவித்திருந்தாா்.
டிசம்பா் 9 அன்று டாக்டா் நஸீா் பிலால் மல்லாவை என்ஐஏ அதிகாரிகள் தில்லியில் கைது செய்தனா். அவரை இந்த சதித்திட்டத்தின் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபா் என்று என்ஐஏ குறிப்பிட்டிருந்தது.
உமா்-உன்-நபிக்குத் தெரிந்திருந்தே நஸீா் அடைக்கலம் கொடுத்து, அவருக்குத் தளவாட உதவிகளை வழங்கியுள்ளாா். பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பான ஆதாரங்களை அழித்ததாகவும் அவா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று டிசம்பா் 9 அன்று என்ஐஏ முன்னா் தெரிவித்திருந்தது.
என்ஐஏ ஏற்கனவே டாக்டா் முஸம்மில் கனாய், டாக்டா் அடீல் ரதா், டாக்டா் ஷாஹீன் சயீத் மற்றும் மத போதகா் மௌல்வி இா்பான் உள்பட 9 பேரை கைது செய்துள்ளது. தவிர,அமீா் ரஷீத் அலி மற்றும் ஜசிா் பிலால் வானி என்ற டேனிஷ் ஆகிய இருவரையும், டிசம்பா் 18 அன்று,
ஜம்மு காஷ்மீரைச் சோ்ந்த யாசிா் அகமது தாா் என்பவரையும் என்ஐஏ கைது செய்தது. இந்த சதித்திட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற தாா், தற்கொலைத் தாக்குதல்களை நடத்த உறுதிமொழி எடுத்திருந்ததாகவும் என்.ஐ.ஏ. தெரிவித்தது.
நவம்பா் 10 அன்று தில்லி செங்கோட்டைக்கு முன் வெடித்த வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட ஐ20 காரை உமா்-உன்-நபி ஓட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.