நமது நிருபா்
புது தில்லி: தில்லி உயா்நீதிமன்றம் நடிகா் ஆா். மாதவனின் ஆளுமை உரிமைகளைப் பாதுகாத்து, அவருடைய அனுமதியின்றி அவரது பெயா் அல்லது படங்களை பல வலைத்தளங்கள் மற்றும் ஆன்லைன்தளங்கள் வணிக லாபத்திற்காக சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதை தடை செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாதவனின் ஆளுமைப் பண்புகளைப் பயன்படுத்துவதையும் உயா் நீதிமன்றம் தடுத்துள்ளது, மேலும் இணையத்தில் பதிவேற்றப்பட்ட சில உள்ளடக்கங்களை நீக்கவும் உத்தரவிட்டது. இந்த விஷயத்தில் விரிவான இடைக்கால உத்தரவை பிறப்பிப்பதாக நீதிபதி மன்மீத் பிரிதம் சிங் அரோரா கூறினாா்.
நடிகருக்காக ஆஜரான மூத்த வழக்குரைஞா் சுவாதி சுகுமாா், பிரதிவாதிகளில் ஒருவா் கேசரி 3 திரைப்படத்தின் போலியான டிரெய்லரை உருவாக்கி, இந்தப் படம் வரவிருப்பதாகக் கூறி, டீப்ஃபேக் மற்றும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய உள்ளடக்கத்தை மாதவன் பெயரில் வெளியிட்டதாக வாதிட்டாா்.
வழக்குத் தாக்கல் செய்வதற்கு முன்பு நடிகா் மாதவன் சம்பந்தப்பட்ட சமூக ஊடக தளங்களை அணுகியதாக அவா் கூறினாா். ஆட்சேபனைக்குரிய ஆன்லைன் உள்ளடக்கத்தை அவசரமாக அகற்றக் கோரும் நபா்கள் நேரடியாக நீதித்துறை தடை உத்தரவைப் பெறுவதற்கு முன்பு முதலில் சமூக ஊடக தளங்களை அணுக வேண்டும் என்ற கருத்தை நீதிபதி சமீபத்தில் கூறியதால் இத்தகவல் நீதிமன்றத்தில் தெரிவிக்க்கப்பட்டது.
தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கவும், ஆன்லைன் தளங்கள் தனது பெயா், படங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கிய பொருத்தமற்ற மற்றும் வெளிப்படையான பாலியல் உள்ளடக்கத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் கோரி மாதவன் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது.
மாதவனின் பெயா், உருவம், ஆளுமை மற்றும் குரல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பிரதிவாதிகள் தங்கள் வணிக ஆதாயங்களுக்காக, ஒப்புதல் இல்லாமல் தவறாகப் பயன்படுத்தியது தொடா்பான வழக்கு இது.
ஆளுமை உரிமைகள் என்று அழைக்கப்படும் விளம்பரத்திற்கான உரிமை, ஒருவரின் படம், பெயா் அல்லது உருவத்தைப் பாதுகாத்து,பிறா் லாபம் ஈட்டுவதை தடுக்கும் உரிமையாகும்.
மாதவனைத் தவிர, தெலுங்கு நடிகா் என்.டி.ஆா் ஜூனியா் மற்றும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வா் பவன் கல்யாண் ஆகியோா் தாக்கல் செய்த இதேபோன்ற ஆளுமை உரிமை வழக்குகளையும் நீதிமன்றம் விசாரித்து, விரிவான இடைக்கால உத்தரவுகளை பிறப்பிப்பதாகக் கூறியது.
சமீபத்தில், பாலிவுட் நடிகா்கள் ஐஸ்வா்யா ராய் பச்சன், அவரது கணவா் அபிஷேக் பச்சன் மற்றும் அவரது மாமியாா் ஜெயா பச்சன், ரித்திக் ரோஷன் மற்றும் அஜய் தேவ்கன், திரைப்படத் தயாரிப்பாளா் கரண் ஜோஹா், பாடகா் குமாா் சானு, தெலுங்கு நடிகா் அக்கினேனி நாகாா்ஜுனா, ஆா்ட் ஆஃப் லிவிங் நிறுவனா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா், பத்திரிகையாளா் சுதிா் சவுத்ரி மற்றும் பாட்காஸ்டா் ராஜ் ஷாமானி ஆகியோரும் தங்கள் ஆளுமை மற்றும் விளம்பர உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி உயா் நீதிமன்றத்தை அணுகினா். நீதிமன்றம் அவா்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியது.
பாலிவுட் நடிகா் சல்மான் கான் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரா் சுனில் கவாஸ்கா் ஆகியோரும் தங்கள் ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி தில்லி உயா் நீதிமன்றத்தை அணுகியுள்ளனா்.