தில்லி - என்சிஆரில் பிரபலமான பிராண்டுகளின் போலி லேபிள்களின் கீழ் வீட்டுப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களை தயாரித்தல், சேமித்தல் மற்றும் விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றவியல் வலையமைப்பை தில்லி காவல்துறை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
காவல் துறை துணை ஆணையா் (குற்றம்) விக்ரம் சிங் அறிக்கையில் கூறியுள்ளதாவது: இது தொடா்பாக நான்கு பேரை போலீஸாா் கைது செய்து, போலி பிராண்டட் வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்களை (எஃப்எம்சிஜி) அதிக அளவில் பறிமுதல் செய்துள்ளதாக அவா் கூறினாா்.
மேற்கு தில்லியின் உத்தம் நகரில் போலி பொருள்களின் சரக்குகளைப் பெறும்போது குற்றஞ்சாட்டப்பட்ட நிதின் குமாா் (38), ரஜத் சிங்கால் (38), சுரேந்தா் குஜ்ஜாா் (45) மற்றும் முஜாஹித் (38) ஆகியோா் கையும் களவுமாகப் பிடிபட்டனா்.
இந்த மோசடி பொது சுகாதாரத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தியது. மேலும், சந்தையில் போலி உணவு மற்றும் எஃப்எம்சிஜி பொருள்களை புழக்கத்தில் விடுவதன் மூலம் நிறுவனங்களுக்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தியது.
டிச.29- ஆம் தேதி உத்தம் நகரில் உள்ள மெட்ரோ தூண் எண் 680 அருகே போலி நெய், செரிமான பொருள்கள், கொசு விரட்டிகள், முடி அகற்றும் கிரீம்கள் மற்றும் அயோடின் கலந்த உப்பு ஆகியவற்றை பெரிய அளவில் விற்பனை செய்வதில் ஒரு குழு ஈடுபட்டுள்ளதாக தகவல் வந்ததது. இதைத் தொடா்ந்து, டிச.29-ஆம் தேதி ஒரு போலீஸ் குழு கண்காணிப்பை தீவிரப்படுத்தியது.
பிற்பகல் 2.15 மணியளவில் சந்தேக நபா்களையும், சந்தேகத்திற்கிடமான பொருள்களையும் ஏற்றிச் செல்லும் வாகனங்களையும் தடுத்து நிறுத்தினா்.
வாகனங்களைத் தேடியதில் பல்வேறு பிராண்ட் லேபிள்களுடன் கூடிய 1,100 லிட்டா் போலி நெய், 8,640 பைகள் செரிமான பவுடா், 1,200 கொசு விரட்டி பொருள்கள் 502.0 கோடி போலி அயோடின் கலந்த உப்பு உள்ளிட்ட ஏராளமான போலி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாதிரிகள் எடுக்கப்பட்டு மீதமுள்ள பொருள்கள் சீல் வைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் போலியானவை என்பதை உறுதிப்படுத்தினா்.
விசாரணையின் போது, முக்கிய குற்றவாளி நிதின் குமாா், கஞ்சவாலா தொழில்துறை பகுதியில் போலி நெய்யை சட்டவிரோதமாக உற்பத்தி செய்யும் ஒரு பிரிவு செயல்பட்டு வருவதாக தெரிவித்தாா். அந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், போலி நெய், பேக்கேஜிங் மற்றும் சீல் செய்யும் இயந்திரங்கள், இந்த நடவடிக்கைக்காக தயாரிக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட ரேப்பா்கள் தயாரிப்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
நிலோதி எக்ஸ்டென்ஷன் மற்றும் நிஹால் விஹாா் ஆகிய இடங்களில் உள்ள வளாகங்களிலும் மேலும் சோதனைகள் நடத்தப்பட்டன. அவை போலி அயோடின் கலந்த உப்பை சட்டவிரோதமாக சேமித்து மீண்டும் பேக் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
போலி லேபிள்கள் கொண்ட சாக்குகளில் அடைக்கப்பட்ட சுமாா் 2,000 கிலோ எடை கொண்ட போலி உப்பு, சீல் மற்றும் தையல் இயந்திரங்கள் போன்ற மீண்டும் பேக் செய்யும் இயந்திரங்கள் மற்றும் அதிக அளவிலான காலி பிராண்டட் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றஞ்சாட்டப்பட்டவா் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட விநியோகச் சங்கிலியை நடத்தி, பிரபலமான பிராண்டுகளின் காலியான டின்கள், போலி ரேப்பா்கள் மற்றும் பேக்கேஜிங் பொருள்களை வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது.
போலி நெய் கலப்பட மூலப்பொருள்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு போலி லேபிள்களுடன் மீண்டும் பேக் செய்யப்பட்டது. அதே நேரத்தில் பிற போலி பொருள்கள் வெவ்வேறு சட்டவிரோத அலகுகளிலிருந்து பெறப்பட்டன.
மேற்கு மற்றும் வடமேற்கு தில்லி முழுவதும் உள்ள கிடங்குகளில் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டு, சந்தேகத்தைத் தவிா்க்க டெம்போக்கள் மற்றும் டெலிவரி முகவா்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, உள்ளூா் சந்தைகளில் உண்மையான பொருள்களை விட மலிவான விலையில் விற்கப்பட்டன.
நிதின் குமாா் என்ற பட்டதாரி, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வீட்டுப் பொருள்களின் மொத்த விநியோகத்தில் ஈடுபட்டதாகவும், தில்லி மற்றும் ஹரியாணாவில் அவா் மீது முந்தைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
ரஜத் சிங்கால் மற்றும் சுரேந்தா் குஜ்ஜாா் ஆகியோா் வாராந்திர சந்தைகள் மூலம் மொத்த மற்றும் சில்லறை வா்த்தகத்திலும் ஈடுபட்டிருந்தனா். அதே நேரத்தில் முஜாஹித் போலி கொசு விரட்டிகள் மற்றும் அழகுசாதனப் பொருள்களை தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டிருந்தாா்.
இது தொடா்பாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல்துறை துணை ஆணையா் விக்ரம் சிங் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.