டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அவரது தந்தையை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் (25). குருகிராம் சுஷாந்த் லோக் இன் செக்டார் 57- இல் தனது தந்தை, அவரது தாயார் மற்றும் அவரது சகோதரருடன் வசித்து வந்தார். இந்நிலையில், ராதிகா யாதவை அவரது தந்தை தீபக் யாதவ் (49) வியாழக்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
ராதிகா யாதவ் முதல் மாடியில் சமையலறையில் உணவு சமைத்துக் கொண்டிருந்தபோது தீபக் யாதவ் அவரை துப்பாக்கியால் சுட்டார். நான்கு குண்டுகள் பாய்ந்ததில் ராதிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தரைத்தளத்தில் இருந்த அவரது தாயார், துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டதும் மாடிக்கு விரைந்தார். சமையல் குக்கர் வெடித்ததாக எண்ணியதாக அவர் போலீஸாரிடம் தெரிவித்தார்.
ராதிகாவின் மாமா அளித்த புகாரின் பேரில், குருகிராம் செக்டார் 56 காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, தீபக் யாதவ் கைது செய்யப்பட்டார். கொலைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் உரிமம் பெற்ற ரிவால்வரை அவரிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மகள் வருமானத்தில் வாழ்வதாக தீபக் யாதவ் அடிக்கடி கேலி செய்யப்பட்டதால் மனமுடைந்து ராதிகாவை சுட்டுக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், காவல் துறை அதிகாரபூர்வ அறிக்கையில், ராதிகா நடத்திய டென்னிஸ் அகாதெமி தொடர்பாக தந்தைக்கும் மகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு ராதிகாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குருகிராம் வாஜிராபாத் அருகேயுள்ள கிராமத்தில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட தீபக் யாதவை இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல் துறை தரப்பில் குருகிராமில் உள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிமன்றம், தீபக் யாதவை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.