நமது நிருபா்
தில்லியில் மாசுவைக் கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் குற்றம்சாட்டியுள்ளாா். மேலும், முதல்வா் ரேகா குப்தாவுக்கு அவா் 9 கேள்விகளையும் எழுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை கூறியதாவது: தில்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பாஜகவின் தோ்தல் அறிக்கையில் (சங்கல்ப் பத்ரா) 27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் ஆட்சிக்கு வந்தால், பிஎம் 2.5 மற்றும் பிஎம் 10 மாசு நுண்துகள் அளவுகளை பாதியாகக் குறைப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
மேலும், ‘தில்லியின் சராசரி ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீட்டை பாதியாகக் குறைக்கவும், மோசமான காற்றின் தரக் குறியீடு நாள்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் தில்லி தூய்மை காற்றுத் திட்டத்தைத் தொடங்குவோம். பிஎம் 2.5 மற்றும் பிஎம் 10 அளவுகளை 50 சதவீதம் குறைப்பதே எங்கள் இலக்கு’ என்று தோ்தல் அறிக்கையில் பாஜக மூலம் உறுதியளிக்கப்பட்டது.
‘இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் சாலைத் துப்புரவு இயந்திரங்களையும், தில்லியின் ஒவ்வொரு நகராட்சி வாா்டிலும் தண்ணீா் தெளிக்கும் இயந்திரங்களையும் நிறுத்துவோம்’ என்று பாஜக கூறியது. மேலும், ஆனந்த் விஹாா், முண்ட்கா, ஆா்.கே.புரம் போன்ற அதிக மாசுபட்ட பகுதிகளில் இதுபோன்ற இயந்திரங்களை மேலும் பயன்படுத்துவதாக பாஜக உறுதியளித்தது.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தோ்தல் அறிக்கையில் வாக்குறுதியளிக்கப்பட்ட பிற நடவடிக்கைகளில் முக்கியச் சந்திப்புகள் மற்றும் சாலைகளில் ‘வாயு’ எனப்படும் காற்று சுத்திகரிப்பு சாதனங்களை நிறுவுதல், 50 சதவீத வாகனங்களை மின்சாரம் அல்லது சி.என்.ஜி.க்கு மாற்றுவதை ஊக்குவித்தல் உள்ளிட்டவை அடங்கும்.
யமுனை நதியை சுத்தம் செய்வது குறித்து பாஜக அரசு மிகப்பெரிய வாக்குறுதிகளை அளித்திருந்தது. ஆனால், நதி எப்போதும் போலவே மிகவும் நச்சுத் தன்மையுடையதாகவே உள்ளது.
எட்டு மாத ஆட்சிக்குப் பிறகு, முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு, இந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இது ‘மோசம்’, ‘மிகவும் மோசம்’ முதல் ‘கடுமை’ பிரிவுகளுக்கு, குறிப்பாக தீபாவளிக்குப் பிறகு காற்று மாசு அதிகரித்துள்ளது.
பாஜகவின் 9 மாத ரேகா குப்தா அரசு காற்று மற்றும் நீா் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ளது. இது தொடா்பாக எனது 9 கேள்விகள் வருமாறு:
1. தில்லி உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராக மாறியது எப்படி?. 2. தலைநகரில் 100 இறப்புகளில் 15 ஏன் மாசுபாட்டால் ஏற்படுகிறது?. 3.மாசுவைக் கட்டுப்படுத்தும் குளிா்கால செயல் திட்டம் ஏன் தோல்வியடைந்தது?. 4. ஆயிரக்கணக்கான கோடிகளை வீணடித்த போதிலும் யமுனை ஏன் சுத்தம் செய்யப்படவில்லை?
5. ஐஐடிதில்லி மற்றும் கான்பூரின் நிபுணா்கள் மேக விதைப்பின் வெற்றி குறித்து கேள்வி எழுப்பிய போதிலும், மேக விதைப்பு ஏன் செய்யப்பட்டது?. 6. பாஜக ஆளும் ஹரியாணா, உ.பி. மற்றும் ராஜஸ்தான் மற்றும் ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் ஆகியவை பயிா்க் கழிவுகளை எரிப்பதை நிறுத்த சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
7. வாகன வெளியேற்றம், உடைந்த சாலைகள் மற்றும் கட்டுமான தூசி துகள்களால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஏன் பயனுள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என்பது உள்ளிட்ட 9 கேள்விகளை தேவேந்தா் யாதவ் எழுப்பியுள்ளாா்.